மலை முழுங்கி சின்னக் குருவி! | Mountain Swallow a Little Sparrow

சிட்டுக்குருவி, தவிட்டுக் குருவி, ரெட்டைவால் குருவி, உழாவராக் குருவி, தூக்கணாங்குருவி, ஊர்க்குருவி என இப்படிப் பல குருவிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். மலை முழுங்கி சின்னக் குருவியைப் பற்றித் தெரியுமா?

அதோ... ஒரு பெரிய மலை தெரியுது இல்லையா? அதற்குக் கீழ மலையடிவாரத்துல கொன்றை மரம் ஒன்று இருக்கு. அந்த மரத்துல கூடு கட்டி வாழுது இந்த மலை முழுங்கி சின்னக் குருவி.

அது பொதுவான குருவிதான். தன்னால நாள்தோறும் ஒரு மலையை முழுங்க முடியுதுன்னு, மற்றவர்களை நம்ப வைத்து, தனக்குத் தானே வைத்துக் கொண்ட பெயர்தான் மலை முழுங்கி சின்னக் குருவி.

அந்தக் கொன்றை மரத்துல சின்னக் குருவியைப் போலவே, வேறொரு கிளையில மைனா ஒன்றும் கூடு கட்டி வாழ்ந்தது. ஒரே மரத்தில இருக்கிறதால, இரண்டு பேரும் நண்பர்கள் ஆனார்கள்.

ஒவ்வொரு நாளும் மைனா எங்கே போனதோ, அந்த இடத்தோட வளத்தையும், அழகையும், மிக அழகாகச் சின்னக் குருவியிடம் வந்து சொல்லும்.

அடிப்படையில சின்னக் குருவி ரொம்ப சோம்பேறி. ரொம்ப தூரம் பறந்து போய் இரையைத் தேடாது. பக்கத்திலேயே போய்விட்டு கூட்டுக்குத் திரும்பிவிடும். வந்து கூட்டுக்குள் உறங்கும். தாகம் எடுத்தால் மலையடிவாரத்துல ஓடும் நதியில் தண்ணீரைக் குடிக்கும். ஆனா, மைனாகிட்ட “நான் ரொம்ப தூரம் போனேன். அங்கே ஒரு அதிசயத்தைப் பார்த்தேன்னு” ரொம்ப பொய் சொல்லும்.

சின்னக் குருவி சொல்லும் பொய்களை உண்மை என்றே நம்பியிருந்தது மைனா.

Also Read: தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு

குருவி நண்பனே! எனது நண்பர்கள் வெளியூரிலிருந்து, அருகில் உள்ள ஊருக்குச் சுற்றுப்பயணம் வருகிறார்கள். ஆகையால் நான் அங்கு செல்கிறேன். வருவதற்கு ஒரு வாரம் ஆகிவிடும்” என்று கூறிவிட்டு புறப்பட்டது மைனா.

Mountain Little Sparrow 1
மைனா திரும்பி வருவதற்குள் சின்னக் குருவி, ‘மலை முழுங்கி சின்னக் குருவி’ என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்டது. அது சுற்றுவட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஒருவாரம் கழித்து, திரும்பி வந்த மைனா, “என்ன குருவி நண்பனே! உனது பெயர் சின்னக் குருவிதானே! ஆனால், எல்லோரும் மலை முழுங்கி சின்னக் குருவி என்று அழைக்கிறார்களே” என்று ஆவலாகக் கேட்டது.

ஹா....! ஹா...!” என்று சிரித்த சின்னக் குருவி, “என்ன மைனாவே! என்னுடைய பலத்தை அறியாமல் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டாயே. நீ என் நண்பன் என்பதால் உன்னை சும்மா விடுகிறேன். வேறு யாராவது கேட்டிருந்தால் அவ்வளவுதான்” எனக் கோபமாகக் கூறியது.

நண்பனே! இதிலே கோப்படுவதற்கு என்ன இருக்கிறது. நாம் இருவரும் பல ஆண்டுகள் நண்பர்களாக இருக்கிறோம். ஆகையால் உனது பலம் எனக்கும் தெரியும். அதுமட்டுமல்ல நம்மைப் போன்ற சிறிய பறவைகளால் அவ்வளவு பெரிய மலையை அல்ல... மடுவைக்கூட முழுங்க இயலாதே” என்றது மைனா.

Also Read: கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்

அப்படியா? நீ நம்ப வில்லைதானே? சரி, நாளைக்குக் காலை அந்த நதிக்கு வா.. நான் மலையை முழுங்குவதைக் காணலாம்” என்றது சின்னக் குருவி.

சரி!” என்று கூறிவிட்டு உணவுத் தேடிப் பறந்தது மைனா.

மறுநாள் காலை மலையடிவாரத்தில் உள்ள நதிக்கு இரண்டும் வந்தன.

அப்போது சூரியன் மலைக்குப் பின்னால் ஒளிவீசிக் கொண்டிருந்தது. அதனால் மலையின் நிழல் நீரில் விழுந்திருந்தது.

மைனாவே! இதோ பார்! இந்த நீரில் மலையின் அச்சு தெரிகிறது அல்லவா?” எனக் கேட்டது சின்னக் குருவி.

ஆமாம், தெரிகிறது” எனப் பதில் சொன்னது மைனா.

இப்போது பார்” எனத் தன் மெல்லிய அலகால் கொஞ்சம் கொஞ்சமாக நீரைக் குடித்துக் கொண்டிருந்தது சின்னக் குருவி.

Mountain Little Sparrow 2

நேரம் ஆக ஆக சூரியன் மேலே போனது. மேலேச் செல்ல செல்ல மலையின் நிழல் நதியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.

Also Read: ராஜாவின் மனக்கவலை - ஜென் கதைகள்

ஒரு மணி நேரத்துக்கு பிறகு, “மைனாவே! பார்த்தாயா? நான் நீரைக் குடிக்க குடிக்க மலையின் நிழல் குறைந்து கொண்டே வந்தது. அந்தக் குறைந்த மலையின் நிழல் என் வயிற்றுக்குள் சென்றுவிட்டது” என்றது சின்னக் குருவி.

இப்போது “ஹா...! ஹா...!” என்று சிரித்தது மைனா.

என்ன மைனாவே! ஏன் சிரிக்கிறாய்?” எனக் கேட்டது சின்னக் குருவி

என்ன சொல்வது குருவி நண்பனே! மலை அதன் இடத்தில் தான் இருக்கிறது. நீ தாகத்துக்கு தண்ணீர் குடித்தாய். சூரியனின் ஒளியால் அதன் நிழல் நீரில் படிந்திருக்கிறது. சூரியன் தன் வேலையைச் சரியாகச் செய்வதால், அதன் ஒளி மேலே செல்ல செல்ல மலையின் நிழலும் குறைந்தது.

அப்படியானால் சூரியன் தானே மலையின் நிழலை முழுங்கி இருக்க முடியும்? நீ முழுங்கி விட்டதாகத் தவறாக நினைத்துக்கொண்டு, பட்டப் பெயரை வேறு சூட்டிக் கொண்டாயே...” என விளக்கியது மைனா.

ஓ.. நான்தான் தவறாகப் புரிந்துகொண்டேனா?” எனச் சொல்லி தலை கவிழ்ந்தது சின்னக் குருவி.

குருவி நண்பனே! கவலைப்படாதே. நாம் நம் கடமையில் சரியாக இருந்தால், அதுவே சிறப்பு தான். இது எல்லோருக்கும் இயல்பாக நடக்கக்கூடிய தவறுதான்” என்றது மைனா.

மைனாவே! என் தவறை எனக்குப் புரிய வைத்ததற்கு நன்றி” என்றது சின்னக் குருவி.

சரி! வா... நண்பனே... இருவரும் இணைந்தே உணவுத் தேடிப் பறப்போம்” என அழைத்தது மைனா.

மிகுந்த உற்சாகத்தோடு, வானில் பறக்க ஆரம்பித்தது சின்னக் குருவி.

Also Read: துணி துவைத்த சீடர்கள் - பரமார்த்த குரு கதைகள்

“குழந்தைகளே, உங்கள் வீட்டின் அருகில் உள்ள மரங்களில் பாருங்கள்... அந்த சின்னக் குருவி ஏதும் வந்திருக்கிறதா என்று. முடிந்தால் உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் குருவிகளுக்காகத் தானியங்களையும், நீரையும் வையுங்கள்.”


கதை ஆசிரியர்: கன்னிக்கோவில் இராஜா

நன்றி: தி இந்து (April 22, 2015)

Story & Image Credit: The Hindu (tamil.thehindu.com)


மலை முழுங்கி சின்னக் குருவி! | Mountain Swallow a Little Sparrow மலை முழுங்கி சின்னக் குருவி! | Mountain Swallow a Little Sparrow Reviewed by Dinu DK on April 26, 2015 Rating: 5

11 comments:

Powered by Blogger.