பீமனின் பிறந்தநாள் பரிசு | Bhima's Birthday Gift

பீமனின் பிறந்தநாள் பரிசு

(Bhima's Birthday Gift - Bheem Story in Tamil)


ஒரு சனிக்கிழமை காலையன்று, பீமன் மிக்க எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான்.

அன்றைய மறுநாள் அவனது பிறந்தநாள்.

அவனுடைய நண்பர்கள் அனைவரையும் வீட்டிற்கு வரவைத்து அவர்களுக்கு அம்மா செய்து கொடுத்த கொழுக்கட்டை, பாயசம், முறுக்கு என சுவையான தின்பண்டங்களை அளிக்க திட்டமிட்டிருந்தான்.

விருந்திற்கு பிறகு, சிறுவர்கள் விளையாடுவதற்காக அவன் தந்தையிடம், திருடன்-போலீஸ், வினாடி வினா, கிரிகெட் என சில விளையாட்டுகளை நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். . அவன் தந்தையும் அவ்வாரே செய்வதாக ஒப்புக்கொண்டு வினாடி வினாவிற்கான கேள்விகளை சேர்க்க தொடங்கினார்.

பீமனின் தங்கை, துஷாலா, அவனுக்கு வந்த பரிசுகளை அடுக்கிவைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டாள்.

Bhima's Birthday Gift

மேலும் அவளை, பதினைந்து சிறு அட்டைகளில் வண்ணமயமான ஓவியம் வரைந்து கொடுக்குமாறு  கேட்டான். அவ்வட்டைகளை அவன் நண்பர்களுக்கு அழைப்பிதழ்களாக கொடுக்க நினைத்தான்.

Also Read: எறும்பும் வெட்டுக்கிளியும்

இதையெல்லாம் பீமன் ஒரு வாரமாக பெற்றோருடன் ஆலோசித்து, திட்டமிட்டு செயல்பட்டான்.

"துஷாலா! என் பிறந்தநாள் விழாவிற்கான  அழைப்பிதழ்கள் எங்கே?"

"இன்னும் ஒரு நாள் இருக்கின்றதே! என்ன அவசரம் உனக்கு?" என்று கேட்டாள் அவன் தங்கை.

"இன்றே கொடுக்கவேண்டும்! இன்று சனிக்கிழமை . எனது பிறந்தநாளோ நாளை-ஞாயிறு. நாளை பள்ளிக்கூடம் மூடி இருக்கும். இன்று இல்லாவிட்டால் நான் அவர்களை அழைக்க இயலாதே!"

துஷாலா சிரித்தபடி தனது பையில்லிருந்து இருபது அழகான அழைப்பிதழ்களை எடுத்து கொடுத்தாள்.

"இவை நேற்றே தயாராக இருந்தன. நீதான் கேட்கவில்லை!"

"மிக்க நன்றி துஷாலா! இவை மிக அழகாக உள்ளன!" என்று உற்சாகத்துடன் அவளை கட்டிகொண்டான்.

பிறகு ஒவ்வொன்றிலும் அவனது நண்பர்களின் பெயர்களை எழுதினான்.

ஒரு பெரிய அட்டையில் பிறந்தநாள் "கேக்" வரைந்திருந்தது.  அதில் தனது ஆசிரியரின் பெயரை எழுதினான்.

இவ்வழைப்பிதழ்களை எல்லாம் அன்று பள்ளியில் கொடுக்கும் போது அனைவரும் துஷாலாவின் ஆற்றலை அவ்வோவியங்களில் கண்டு வியந்தார்கள்.

மாலை வீட்டிற்கு திரும்பும் போது அவனும் அவன் நண்பர்களும் பிறந்த நாள் விழாவில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சில பந்துகளும், சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாட வண்ண சிறுதுணிகளும் வாங்கிக்கொண்டு சென்றான்.

Also Read:  சிங்கத் தோல் போர்த்திய கழுதை

இவை அனைத்தையும் துஷாலாவிடம் ஒப்படைத்தான். பாடங்களை படித்துவிட்டு, உணவு உண்டவுடன் மிக்க களைப்புடன் தூங்கிவிட்டான்.

துஷாலா பந்துகளையும் சிறுதுணிகளையும் கொண்டிருந்த பையை  தனது அறையில் இருந்த மேசை மேல் பத்திரமாக வைத்துவிட்டு உறங்கினாள்.

மறு நாள் எழுந்தவுடன் அம்மா அப்பா இருவரும் பீமனை தழுவி முத்தமிட்டனர்.

தாத்தா பாட்டி தொலைபேசியில் அவனை வாழ்த்தி, மாலை விழாவிற்கு வருவதாக சொல்லினர்.

சில நண்பர்களும் வாழ்த்துக்களை தொலைபேசி மூலம் கூறினர்.

அம்மாவும் அப்பாவும் சமயலறையில் மாலை விழாவிற்கான  தின்பண்டங்கள் செய்ய தொடங்கினர்.

அம்மா பீமனை கடைக்கு சென்று மாவு, சர்க்கரை, உப்பு, பருப்பு வாங்க அனுப்பினாள்.

பீமன் கடைக்கு செல்லும் முன் அவன் வாங்கிய பந்துகளை எண்ணி ஒரு டப்பாவில் போடுமாறு துஷாலாவை கேட்டுக்கொண்டான்.

அவளும் தூக்க கலகத்துடன் மேசை பக்கம் சென்றால், அங்கு எங்கும் பையை காணவில்லை.

"அம்மா! இங்கிருந்த பந்துகளையும் சிறு துணிகளையும் எங்காவது வைத்தீர்களா?"

"உங்கள் அறை பக்கமே நான் வரவில்லை! அங்கு தான் இருக்கும்! சரியாக தேடு!"

துஷாலா அங்கும் இங்கும் தேடினாள். மேசைக்கு மேல். கீழ். படுக்கை பக்கம். கதவின் பின்னால். எங்கும் அகப்படவில்லை. அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது.

Also Read: பாம்பும் விவசாயியும்

சமையலறை பக்கம் தேடினாள்.

"இங்கெல்லாம் உனது பந்து எப்படி கிடைக்கும்? நீதான் அதை உனது அறையில் எங்காவது பத்திரமாக வைக்கும் எண்ணத்தில், இருக்கும் இடம் தெரியாமல் வைத்துவிட்டுரிப்பாய். அங்கு தேடு!" என்றாள் அம்மா.

"இல்லை! நான் அந்த அறை முழுவதும் தேடிவிட்டேன். அந்த பந்துகள் இருக்கும் பை அங்கு இல்லையே!"

"பீமனிடம் மாட்டிக்கொண்டாய்! அவன் கடையில் இருந்து வந்தவுடன் நன்றாக திட்டுவான்."

துஷாலா அழ தொடங்கினாள். பீமனும் வீடு திரும்பி விட்டான்.

தங்கை அழுவதை பார்த்து " துஷாலா நீ ஏன் அழுகிறாய்? நீ தான் எதை கண்டாலும் அஞ்சாதவள் இல்லையா? "

"ஆனால் உன்னை பார்த்தால் பயம் தானே!"

பீமன் எங்கோ சிக்கல் என கண்டுக்கொண்டான்.

"என்னை பார்த்து பயமா? ஏன்?"

துஷாலா பந்துகளும் சிறுதுணிகளும் இருக்கும் பை காணாமல் போனதை பற்றி சொன்னாள்.

"அவ்வாறு எப்படி தொலைந்துபோகும். அதுவும் நமது அறையிலிருந்து…

இரு. சேர்ந்து ஒரு முறை தேடுவோம்."

இருவரும் அறை முழுதும் தேடினர். பை சிக்கவில்லை.

"ஹ்ம்ம்... இது மர்மம் தான். சற்று யோசிப்போம் பொறு. நீ அம்மாவிற்கு  சீடை செய்ய உதவு."

துஷாலா சென்றவுடன் பீமன் சற்று நேரம் மேசை பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்து சிந்தித்தான். மேசை பின் இருந்த ஜன்னலிலிருந்து காலை வெய்யில் சற்று அறையினுள் எட்டி பார்த்தது.

பீமனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

"துஷாலா! இங்கு வா!" என கூக்குரலிட்டான்.

அவளும் ஓடி வந்தாள்.

"இரவு இந்த ஜன்னல்  திறந்திருந்ததா? சிந்தித்து சொல்," என வினவினான் பீமன்.

"ஆமாம். ஏன்?"

"நமது பந்துகளை யாரோ திருடிக்கொண்டு சென்றிருப்பார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம்."

துஷாலா பயத்துடன் "நாம் தூங்கும் போது நமது அறைக்குள் ஒரு திருடன் வந்திருப்பானா?" என்றாள்.

"ஹ்ம்ம்.. இரு கண்டுபிடிப்போம்."

அவன் தனது புத்தக அலமாரி பக்கம் சென்றான். அங்கு அவனது பேனா பென்சில்களுடன் இருந்த ஒரு சிறிய பூதக்கண்ணாடியை எடுத்தான்.

"துஷாலா! சற்று ஓடி சென்று அம்மாவின் அறையிலிருந்து பவுடர் டப்பாவை எடுத்துவா!"

"எதற்காக?"

"இது துப்பறியும் பீமன் உத்தரவு!" என்றான் பீமன் சிரித்துக்கொண்டு.

ஒரு பச்சை நிற டால்கம் பவுடர் டப்பாவை எடுத்து வந்தாள் துஷாலா.

"அடுத்து. நீ ஓவியம் வரைய உபயோகிக்கும் தூரிகையை கொடு."

அவள் சிறிய ஒட்டகம் வரைந்திருந்த அவளது தூரிகையை கொடுத்தாள்.

"இப்பொழுது பார்! துப்பறியும் பீமன் நமது கள்வன் யார் என்று கண்டு பிடிக்க போகிறான்!"

துஷாலா மிக்க ஆர்வத்துடன் அவனை பின் தொடர்ந்தாள்.

பீமன் சிறிதளவு டால்கம் பவுடர் எடுத்து மேசை முழுவதும் மெதுவாக பூசினான்.

Also Read: தவளையும் சுண்டெலியும்

பின்னர் தங்கையின் தூரிகையை கொண்டு மெல்ல மெல்ல பரப்பினான்.

"இப்பொழுது பார்! கள்வனின் கைரேகை மேசை மேல் தெரியும். அகபட்டான் திருடன்!"

ஆனால் மேசை மேல் புலப்பட்டதோ மிக சிறிய வட்டங்கள் மட்டுமே.

"அண்ணா! இவை உண்மையிலயே ஒருவருடைய கைரேகைகளா?"

மேசை முழுவதும் அச்சிறிய வட்டங்கள் பரவியிருந்தன.  பீமனுக்கும் சற்று வியப்பாகவே இருந்தது.

அவன்  பூதக்கண்ணாடி வழியாக அவ்வட்டங்களை கூர்ந்து பார்த்தான்.

"ஹ்ம்ம். எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஆனால் எப்படி...ஹ்ம்ம்.."

"என்னது? எப்படி? எனக்கு ஒன்றும் புரியவில்லை," என்று துஷாலா சலித்துகொண்டாள்.

"பொறுமையாக இரு!"

பீமன் அடுத்து ஜன்னல் பக்கம் சென்று பவுடர் பூசி தூரிகையால் தட்டினான்.

"இங்கு பார். இங்கும் அதே வட்டங்கள்."

ஜன்னல் வழியாக எட்டி பார்த்தான். ஜன்னலின் கீழ் புல்செடி அடர்த்தியாக இருந்தது.

"வா! வெளியே சென்று ஜன்னலின் கீழ் பார்ப்போம்!"

"எதற்காக?"

பீமன் மெலிதாக சிரித்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை.

ஜன்னல் கீழ் வளரும் புல்செடிகளை உற்று கவனித்தான். அவன் தங்கையும், எதுவும் புரியவில்லை என்றாலும் அவன் செய்த வாரே அவளும் செய்தால்.

Also Read: நாயும் அதன் நிழலும்

"பார்த்தாயா? அங்கும் இங்கும் சற்று புல்செடி கலைந்துள்ளதை? நாம் நினைத்தது சரிதான். "

"நாம் என்ன நினைத்தோம் அண்ணா?"

"ஹா ஹா! வா, என் பின்னாடி. சத்தமில்லாமல். ஷ்ஷ்ஷ்!"

"திருடன் இங்குதான் இருக்கிறானா?"

"ஆமாம்" என்றான் பீமன் தாழ்ந்த குரலில்.

துஷாலாவிற்கு மிக்க பயமாக இருந்தது. இதயம் பட பட வென அடித்துக்கொண்டது. பீமனின் கையை பிடித்துக்கொண்டாள்.

"பயப்படாதே! என் பின் மெதுவாக வா. அந்த புதரை நோக்கி!"

இருவரும் மெதுவாக வீட்டின் பின் பக்கம் வளர்ந்த ஒரு புதரை நோக்கி சென்றனர்.

புதரினுள் பீமன் குனிந்த வாறு தலையை  விட்டான். துஷாலாவும் அவ்வாரே செய்தாள். மகிழ்ச்சியில் கூவினாள்.

"பை இதோ!" என்றாள்." இது எப்படி இங்கு வந்தது?"

"திருடன் கொண்டு வந்தான். உனக்கு அவனை பார்க்கவேண்டுமா?"

"வேண்டாம்!"

"அட பயந்தாங்குளி! இந்த பக்கம் சற்று பார்!" என்று பீமன் புதரின் மறு பக்கம் அவளுக்கு சுட்டி காட்டினான்.

"அட! பூனைக்குட்டி!" என்று சந்தோஷமாக கத்தினாள் அவன் தங்கை.

அங்கு ஒரு வெள்ளை நிற பூனைக்குட்டி தூங்கிக்கொண்டிருந்தது. அவள் சத்தம் கேட்டவுடன் எழுந்து  வாலை தூக்கிக்கொண்டு அவள் காலருகில்  சுத்தியது. பார்க்க மிகவும் குட்டியாக அழகாக இருந்தது.

துஷாலா அதை தூக்கிக்கொண்டு கொஞ்சினாள். அது தனது குட்டி தலையை "மியாவ் மியாவ்" என்று சத்தமிட்டுக்கொண்டு செல்லமாக அவளை முட்டியது.

"இதுதான் அந்த பையை திருடியது என்று எப்படி கண்டுபிடித்தாய்?"

"கால் ரேகைகளை கண்டு தான். அதுவுமில்லாமல் சில நாட்கள் முன் ஒரு தாய் பூனை இங்கு சுத்திகொண்டிருந்ததை கவனித்தேன். இரண்டையும் சேர்த்து யோசித்து, திருடியது ஒரு பூனைக்குட்டியாக இருக்கலாம் என்று யூகித்தேன். ஜன்னல் வழியாக இது நேற்று இரவு நமது அறையில் குளிருக்காக வந்து தூங்கியிருக்க வேண்டும். பிறகு பந்துகளுடன்  விளையாடிவிட்டு பையை புதருக்கு எடுத்து கொண்டு சென்றுவிட்டது."

துஷாலா, பூனைக்குட்டியை பார்த்து "இவ்வளவு விஷமம் செய்துவிட்டு பசிகிறதா உனக்கு? வா கிண்ணியில் பால் ஊற்றி தருகிறேன்."

அதை எடுத்துக்கொண்டு சமையலறை சென்றாள்.

அம்மா "எங்கிருந்து இதை பிடித்துகொண்டு வந்தாய்! உடனே போய் இதை வெளியே விடு. கைகளை அலம்பு!" என்று கத்தினாள்,

இதை எதிர்பார்த்திருந்த துஷாலா  அவள் யோசித்து வைத்திருந்த உத்தியை கையாண்டாள்.

"ஆனால் அம்மா நான் இதை பீமனின் பிறந்தநாள் பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளேன்.

அண்ணா! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!" என்று பூனைக்குட்டியை அவனிடம் கொடுத்தாள்.

பீமன் வாய் விட்டு சிரித்தபடி பூனைக்குட்டியை வாங்கிகொண்டு, "இனி இந்த திருட்டு பூனைக்குட்டி இங்கு இருக்கட்டுமா?" என்று அம்மாவிடம் கேட்டான்.

அம்மாவும் சிரித்தபடி சரி என தலையாட்டினாள்.

பீமனின் பிறந்தநாள் பரிசு அவனை சற்றே செல்லமாக முகத்தில் நக்கியது.

 Also Read: நரியும் கொக்கும்

துஷாலா கிண்ணத்தில் அதற்கு பால் வைத்ததும் தாவி சென்று அதை குடித்தது. அடுத்து என்ன விஷமம் செய்யலாம் என்று சிந்திபாதை போல் அதன் கண்கள் ஜொலித்தன.

"உன்னை போலவே குறும்பான ஒரு பரிசு கொடுத்தாய்!" என்று தங்கையை பார்த்து சொல்லியபடி சிரித்தான் பீமன்.

Story and Image Credit: Lalith KrishnanStory Submitted By: Lalith Krishnan

Age Group : Kids

Submitted Date: 20 October 2014


Story Title: பீமனின் பிறந்தநாள் பரிசு | Bhima's Birthday Gift - Bheem Story for Kids

பீமனின் பிறந்தநாள் பரிசு | Bhima's Birthday Gift பீமனின் பிறந்தநாள் பரிசு | Bhima's Birthday Gift Reviewed by Dinu DK on October 23, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.