கட்டிலின் கீழ் வாழும் குட்டி பூதம் | Goblin Living Under The Bed - Bheem Story

கட்டிலின் கீழ் வாழும் குட்டி பூதம் 

(Goblin Living Under The Bed - Bheem Story in Tamil)


சிறு பிள்ளை பீமனை கண்டால் பெரியவர்கள் அனைவருக்கும் மிகப்பெருமை. “இவனுக்கு பயமே கிடையாது அப்பா!" என்று தாத்தா வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவரிடம் சொல்லி மகிழ்வாள் அவனுடைய அம்மா.

தாத்தா அவனை பார்த்து "அப்படியாடா என் சிங்கக்குட்டி?" என சிரித்துவிட்டு அவனுக்கு ஒரு மிட்டாய் கொடுப்பார்.

பீமனும் அதை வாங்கி தின்றுவிட்டு அவனுடைய புதிய பிரதாபங்களை சொல்ல தொடங்குவான்.

Goblin and Little Girls - Bheem Story in Tamil

"நேத்துக்கு பாலா எங்க கிளாஸ்ல ஒரு பேய் படத்தோட கதைய சொன்னான். அதுல ஒரு மோகினி பிசாசு வந்து ரோட்ல போறவங்க எல்லாருயும் பயமுடிதிண்டு இருக்குமாம். அத கேட்டு எல்லாரும் பயந்துட்டாங்க. நான் சொன்னேன் அது பிசாசுலாம் இல்ல வெறும் வெள்ளை புடவை கட்டிண்ட ஒரு நடிகைதான். கரெக்ட் தான தாத்தா?"

இதையெல்லாம் கேட்டுகொண்டிருப்பாள், அறையின் மற்றொரு மூலையில் அமர்ந்து, தன் பொம்மையுடன் விளையாடும் அவனது தங்கை துஷாலா. அவளுக்கு வயது நான்கு. பீமனுக்கு அடுத்த மாதம் ஏழு.

துஷாலா எதை கண்டாலும் அழும் ஒரு சிறந்த அழுமூஞ்சி. விழுந்தால் அழுகை. பொம்மை உடைந்தால் அழுகை. சற்றே அதட்டி பேசிவிட்டால் ஒரு மணி நேரத்திற்கு விடாதழுகை.

சில சமயம் பீமன் போல் அஞ்சானெஞ்சுடன் இருக்க சொல்லிக்கொடுக்க முயல்வார் அப்பா. அணைத்து முயற்சிகளிலும் தோல்வியே நிச்சயம்.

தாத்தா  துஷாலாவை  பார்த்து சொன்னார்  "நீயும் உன் அண்ணனைப்போல்  தைரியமாக இருக்க கற்றுகொண்டால் உன்னை அடுத்த வாரம் மிட்டாய் பாக்ட்ரிக்கே அழைத்து செல்லுகிறேன். என்ன?"

துஷாலா அவர் கூறிய வார்த்தைகளை மனதில் எடை போட்டாள். பொம்மையை கீழே வைத்துவிட்டு மெதுவாக இருவரையும் நோக்கி வந்தாள்.

"நான் தைரியம் ஆகி விட்டேன் என்று எப்படி தெரியவரும்?"

அம்மா சொன்னாள்.

"என்ன நடந்தாலும் அழவே கூடாது. பீமன் சொல்றத கேட்கணும். அவன்தான் உனக்கு ஒரு வாரம் கழித்து செர்டிபிகய்ட் கொடுப்பான். என்ன பீமன்? தங்கைக்கு தைரியமா  இருக்க சொல்லிக்கொடுப்பாயா?"

பீமன் தங்கையை பார்த்து சற்றே ஏளனமாக சிரித்தான்.

அன்றிரவு அனைவரும் உறங்கிவிட்டனர். குழந்தைகளின் அறையில் பீமனும் துஷாலாவும்  படுத்திருந்தனர். அவள் தன் புலி பொம்மையை இறுக்கி கட்டியபடி தூங்கி கொண்டிருந்தாள்.

மெதுவாக "டக் டக்" என்று கீழிருந்து அவளுடைய படுக்கையின் கீழிலிருந்து சத்தம் வந்தது.

"யார் அது?" என்று துஷாலா அரண்டு போன குரலில் கேட்டாள்.

பயங்கரமான குரல் ஒன்று சொன்னது...

"நான் உன்னுடைய கட்டிலின் கீழ் வாழும் பூதம்!"

அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.

"அழாதே! நான் உனக்கு உதவி செய்ய வந்துள்ள குட்டி பூதம்."

"அப்படியென்றால் நீ நல்ல பூதமா?"

"எல்லா பூதங்களும் நல்ல பூதங்கள் தான். உன்னை போல் குழந்தைகள் தான் தேவை இல்லாமல் எங்களை பார்த்து பயந்து எங்களுக்கு கெட்டப்பெயர் வாங்கி கொடுத்தீர்கள்."

"நல்ல பூதம்னா கிரிக்கெட் ஆடுவீங்களா?"

"கிரிக்கெட், காரம், டென்னிஸ் எல்லாம் ஆடுவோம்"

"எனக்கு டென்னிஸ் பிடிக்காது" என்றாள், அது என்னவென்று கூட தெரியாமல்.

"அது சரி. நீ சரியான  அழுமூஞ்சியாமே? எதற்கெடுத்தாலும் பயப்படுவியாமே? அப்படியா?"

"ஆமாம்."

"நல்லது. நாளைக்கு எப்படி பயப்படாம இருக்கணும்னு சொல்லித்தரேன். நான் இப்பொழுது பூதங்களின் பஜன் போகவேண்டும். பாய்."

அவள் சில நேரம் பூதம் சொன்னதை எல்லாம் நினைத்து சற்று சிந்தனை  செய்துவிட்டு  நித்திரையில் ஆழ்ந்தாள்.

அடுத்த இரவு. அதே நேரம் குட்டி பூதம் அவள் படுக்கையை தட்டினான்.

"பூதமா?"

"நானேதான்."

"பயமா இருக்கு."

"நல்லது. நம்முடைய முதல் பாடம் துவங்கலாம். பயம் வந்தால் முதலில் நீ செய்ய வேண்டியது என்னவென்றால் நான் சொல்லும் மந்திரத்தை சொல்லு. என்னுடைய பூத நண்பர்களெல்லாம் அதை கேட்டு உனக்கு பயம் உண்டாக்குவது எதுவோ அதை நல்லதாக்கிவிடுவார்கள்."

"ரொம்ப பெரிய மந்திரமா?"

"இலவே இல்லை. மூன்றே வரிதான்.

தூன ஷான லான

ஒன ருன பென றின யன

அன ழுன குண ணின

அதை அழகாக மூன்று முறை சொன்னாள்.

"நல்லா சொல்லற. எப்ப பயம் வந்தாலும் சொல்லு. நான் பூதங்கள்ளின் பொதுக்கூட்டத்திற்கு போகிறேன். பாய்."

அவளும் பயம் வந்த போதெல்லாம் அம்மந்திரத்தை முனுமுனுத்தாள். பீமனுக்கு அது காதில் விழும் பொழுதெல்லாம் சிரிப்பு வந்தது.

மூன்றாவது இரவு அவள் தூங்குவதற்கு நேரமாகிற்று. பூதம் வர காற்றிருந்தாள்.ஒரு மணி நேரம் கழிந்த பின் தன் வேலையை துவக்கினான் குட்டி பூதம்.

"என்ன பாப்பா? பயம் குறைந்ததா?"

"கொஞ்சம்."

"சரி. இரண்டாவது பாடம். அழுகை வந்தால் எது அழுகை உண்டாக்குகிறதோ அதை இரண்டு நிமிடம் கண் சிமிட்டாமல் வெறித்து பார். பிறகு மந்திரத்தை சொல். புரிந்ததா?"

அடுத்த நாள் அவள் தடுக்கிய புல்லிலிருந்து காயம் கொடுத்த கல் வரை எதை பார்த்தாலும் சற்று முறைத்து பார்த்து முனுமுனுத்தாள். அம்மா சற்று கவலை பட ஆரம்பித்தாள். பீமன் ஒதுங்கியிருந்து சிரிப்பதை பார்த்துவிட்டாள்.

"என்ன விஷமம் செய்திருக்கிறாய் பீமா?" என்று செல்லமாக அதட்டினாள்.

"பயித்தியம் பிடிக்காமல் இருந்தால் சரி."

தாத்தாவின் வருகைக்கு முன் இரவு,

"இனி பயப்பட மாட்டியே பாப்பா?" பூதம் கேட்டது.

"இல்லவே இல்ல!"

"அப்ப நாளைக்கு மிட்டாய் பாக்டரி போக தயாரா?"

"ஆமாம். ரொம்ப நன்றி பூதம் சார்."

அன்று தாத்தா அவளை பயப்படவைக்க பல சூழ்சிகள் செய்தார். எதுவும் பலிக்கவில்லை.

"பலே! ஆமாம் அது என்ன எப்ப பாரு முணுமுணுக்கற?"

அவள் மந்திரத்தை சொன்னாள்.

"மெதுவாக சொல்லு"

அவருக்கு புரிந்துவிட்டது. பலமாக சிரித்துவிட்டு, "இந்த மந்திரம் யார் சொல்லி கொடுத்தது?"

அவள் கட்டில் கீழ் வாழும் பூதத்தின் கதையை சொன்னாள்.

தாத்தா "அப்படியா?" என்று சிரித்தார்.

மூவரும் மிட்டாய் பாக்டரியில் பல மணி நேரம் கழித்து வீடு திரும்பினர்.

பீமனுக்கு மிட்டாய்கள் தின்றும், மிக்கதூரம் நடந்தும் சோர்வாக இருந்தது. உடனே படுத்துவிட்டான். தூக்கம் தானாக வந்தது.

நடு இரவில் திடீரென்று கட்டிலின் கீழிருந்து ஒரு ஓசை வந்தது. "டக் டக்"

"நான் பூதம் வந்திருக்கிறேன்." என்றது ஒரு மழலை குரல்.

அவன் உண்டனே கிழே குதித்தான். துஷாலா அவனை பார்த்து சிரித்தாள்.

"என்ன அண்ணா? உனக்கு மட்டும் தான் ஏமாற்ற தெரியுமா?"

அவன் அவளை கட்டியணைத்து தலையில் ஒரு கொட்டு செல்லமாக கொடுத்தான்.Story Submitted By: Lalith Krishnan

Age Group : Kids

Submitted Date: 27 August 2014


Story Title: கட்டிலின் கீழ் வாழும் குட்டி பூதம் | Goblin Living Under The Bed - Bheem Story for Kids
கட்டிலின் கீழ் வாழும் குட்டி பூதம் | Goblin Living Under The Bed - Bheem Story கட்டிலின் கீழ் வாழும் குட்டி பூதம் | Goblin Living Under The Bed - Bheem Story Reviewed by Dinu DK on August 31, 2014 Rating: 5

4 comments:

 1. Very nice funny story. My daughter enjoyed it very much..

  ReplyDelete
 2. Won, very nice and creative story. Really I enjoyed. My daughter also enjoyed very much.மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. this wonderful story applicable for all age people.thank you.

  ReplyDelete
 4. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
  பீமனும் துஷாலாவும் தோன்றும் மற்றொரு கதையை படிக்க:http://www.tamilsirukathaigal.com/2014/10/bhimas-birthday-gift.html

  ReplyDelete

Powered by Blogger.