சிறுவர் கதைகள் - பண்ணையார்

பண்ணையார்

கொள்ளக்குடி என்னும் கிராமத்தில் ஒரு பெரிய பண்ணையார் இருந்தார். பணம் நிறைய இருந்த அவரிடம் இரக்க குணம் சிறிதளவு கூட இல்லை. ஏழை எளிய விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைச்சல் சரியாக இல்லாத நேரங்களில், பண்ணை யாரிடம் வட்டிக்கு கடன் வாங்கி, தங்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர். பண்ணையார் தன்னிடம் வட்டிக்கு கடன் வாங்கிய விவசாயிகளின் நிலத்தை, ஏதாவது ஒரு வழியில் ஏமாற்றி, தனக்கிருந்த நிலத்தோடு சேர்த்து வந்தான்.

அசலையும், வட்டியையும் குறித்த காலத்தில் செலுத்த முடியாத ஏழை விவசாயிகள் பண்ணையாரின் பிடியில் சிக்கித் தவித்தனர்.

பண்ணையாரின் மனைவி நல்ல உள்ளம் கொண்டவள். தன் கணவனின் செயல்கள் பிடிக்காமல், அடிக்கடி தன் கணவனை வார்த்தைகளால் கண்டித்து வந்தாள். அவள் தன் கணவனிடம், “ஏழைகள் தங்கள் வியர்வையை நிலத்தில் சிந்தி, அதில் கிடைக்கும் கூலி முழுவதையும் வட்டியாக வயிற்றெரிச்சலோடு கொடுக்கும் போது, அதை வாங்கி நம் பணப்பெட்டியில் போடுவது மிகப் பெரிய பாவம். நீங்கள் இதுநாள் வரை ஏழைகளின் வயிற்றெரிச் சலால் நிறைய பாவ மூட்டைகளை சேர்த்து விட்டீர்கள். இனி வரும் காலங்களிலாவது, ஏழை எளியோரின் கஷ்டங் களை புரிந்துக் கொண்டு வாழ கற்றுக் கொள்ளுங்கள்'' என்று அடிக்கடி தன் கணவனுக்கு புத்திமதிகள் சொல்லி வந்தாள்.

மனைவி சொல்வதை காதில் வாங்காத பண்ணையார், தன் போக்கிலேயே வாழ்ந்து வந்தான்.

ஒரு ஏழை விவசாயியின் மனைவி பண்ணையாரிடம் கடன் வாங்கி, தன் மகளின் திருமணத்தை நடத்தினாள். வாங்கிய கடனுக்காக அசலையும், வட்டியையும் திருப்பித் தர முடியாமல் தவித்த அவள், பண்ணையாரிடம் சென்று தனக்கு கொஞ்ச நாட்கள் அவகாசம் தருமாறு கேட்டாள்.

பண்ணையார், விவசாயியின் மனைவியின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லை. அவள் நிலத்தை தனதாக்கி கொண்டான். தலைமுறை தலைமுறையாக ஆண்டு அனுபவித்து வந்த நிலம் பறிபோனதால், துக்கத்தின் எல்லைக்கே சென்றுவிட்ட விவசாயியின் மனைவி தன் நிலத்தின் மீது படுத்து, உருண்டு அழுதாள். தன் நிலத்தை தனக்கு திருப்பி தந்துவிடும்படி பண்ணையாரிடம் கெஞ்சினாள். பண்ணை யார் நெஞ்சில் சிறிதும் ஈரமில்லாமல், விவசாயியின் மனைவியை விரட்டி விட்டான்.

தன் மனதை தேற்றிக்கொண்ட விவசாயி யின் மனைவி, பண்ணையாரை பார்த்து, “ஐயா! இந்த பரந்த நிலத்து மண்முழுவதும் இப்போது உங்களுக்கு சொந்தம். பல ஆண்டுகள் எனக்கு சொந்தமாக இருந்த இந்த நிலத்து மண்ணில் ஒரு கோணிப்பை மண்ணை எனக்கு தரக் கூடாதா? தயவு செய்து தாருங்கள்'' என்று கேட்டாள்.

"ஒரு கோணி மண்தானே...' என்று பண்ணையார் மண்ணை நிலத்தில் இருந்து எடுத்துக் கொள்ள அனுமதித்தான்.

உடனே விவசாயியின் மனைவியும், அருகில் இருந்த தன் உறவினரிடம் இருந்து ஒரு கோணிப்பையை வாங்கி அதில் முழு கோணிபிடிக்கும் அளவுக்கு மண்ணை நிரப்பினாள். பிறகு கோணியின் வாயை கட்டினாள். எதிரில் நின்றுக் கொண்டிருந்த பண்ணையாரை பார்த்த விவசாயியின் மனைவி, “ஐயா! தயவு செய்து இந்த மூட்டை மண்ணை என் தலையில் தூக்கி வையுங்கள்'' என்றாள்.

பண்ணையாரும் மண் மூட்டையை தூக்கிப் பார்த்து, தூக்கமுடியாமல் நின்றார். விவசாயியின் மனைவி பண்ணையாரை பார்த்து, “ஐயா நான் வயிற்றெரிச்சலோடு இந்த நிலத்தை உங்களுக்கு கொடுத்தேன். நீங்களும் இந்த நிலத்தை என்னிடம் இருந்து அபகரித்துக் கொண்டீர்கள். என்னுடைய முழு சம்மதம் இல்லாமல், என் நிலத்தை நீங்கள் அபகரித்துக் கொண்டதன் மூலமாக, என் நிலத்தில் உள்ள மொத்த மண்ணின் அளவு பாவத்தை சம்பாதித்து வைத்துள்ளீர்கள். என் நிலத்தின் சிறு பகுதி தான் நான் கட்டி வைத்துள்ள இந்த மண்மூட்டை. உங்களுக்கு சொந்தமான பாவமூட்டை. இந்த சிறிய பாவ மூட்டையை தூக்க தத்தளிக்கும் நீங்கள், இந்த பரந்த நிலத்தின் மொத்த பாவத்தை எப்படி சுமக்கப் போகிறீர்களோ தெரியவில்லை'' என்றாள்.

விவசாயியின் மனைவி கூறியதைக் கேட்ட பண்ணையார், சற்று நேரம் ஆடிப் போய் விட்டான். இதுவரை நிறைய பேருடைய வயிற்றெரிச்சலை சம்பாதித்த பண்ணையார், விவசாயியின் மனைவி சொன்ன வார்த்தைகளால், சிந்திக்க ஆரம்பித்தான். தான் இவ்வளவு காலம் ஏழைகளுக்கு இழைத்த கொடுமைகளை எண்ணிப் பார்த்தான். தான் செய்தது எவ்வளவு பெரிய பாவம் என்று உணர்ந்தான். தன் கண்களை திறந்து தான் நல்லறிவு பெற அறிவுரை வழங்கிய விவசாயியின் மனைவியை கைகூப்பி வணங்கினான். தன்னை மன்னிக்கும்படி விவசாயியின் மனைவியிடம் கேட்டுக் கொண்டதோடு, அவளிடம் இருந்து அபகரித்த நிலத்தை அவளுக்கே திருப்பிக் கொடுத்து விட்டான்.
சிறுவர் கதைகள் - பண்ணையார் சிறுவர் கதைகள் - பண்ணையார் Reviewed by Dinu DK on September 20, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.