அரசர் கதைகள் – திருடன்!

திருடன்! 

எருக்கூர் என்னும் ஊரில் நீலகண்டன் என்பவன் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அந்த ஊரில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

அவர்களிடம் விலை உயர்ந்த பொருட்களைப் பறி கொடுத்தவர்கள் அரசரிடம் அழுது புலம்பினர். அந்தத் திருடர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, நூறு பொற்காசுகள் பரிசு என்று அறிவித்தார் அரசர்.

காவல் இருந்த வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தனர். அவர்களால் திருடர்களைப் பிடிக்க முடியவில்லை.

ஒருநாள் இரவு, நீலகண்டனும், அவர் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். ஜன்னலைத் திறப்பது போன்ற ஓசை கேட்டு நீலகண்டனின் மனைவி விழித்துக் கொண்டாள்.

எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்! நம் வீட்டிற்குள் திருடர்கள் வந்து விட்டனர். எழுந்திருங்கள்” என்று அவனை உலுக்கி எழுப்பினாள்.

எழுந்த அவன் பாதுகாப்பிற்காகத் தடியைத் தேடினான்.

அப்போது திருடன் ஒருவன் ஜன்னல் வழியாக உள்ளே வந்தான். அவன் கையில் பளபளவென்று கத்தி மின்னியது.

அவர்கள் இருவரையும் பார்த்த அவன், “என்னை எதிர்க்க முயற்சி செய்யாதீர்கள். வீட்டில் உள்ள நகைகளையும், பணத்தையும் தந்து விடுங்கள். உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். ஏதேனும் மீறி நடந்தால், இந்தக் கத்தியால் குத்திக் கொன்று விடுவேன்” என்று மிரட்டினான்.

துணிவை வரவழைத்துக் கொண்ட நீலகண்டன், “நீ சொன்னது போலவே நடந்து கொள்கிறோம். நம் நகரத்தையே நடுங்க வைக்கும் திருடர் கூட்டத்தில் நீயும் ஒருவனா? ஏன் தனியாக வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.

நான் அந்தத் திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல... சில்லறைத் திருட்டுகள் செய்பவன். அதனால்தான் இப்படிப்பட்ட வீடாகப் பார்த்துத் திருடுகிறேன். வீண் பேச்சுப் பேச வேண்டாம். உடனே நகைளை எடுத்துத் தா” என்று மிரட்டினான் அவன்.

கொண்டு வருகிறேன்” என்ற நீலகண்டன் அடுத்த அறைக்குள் சென்றான். நகைகளை எடுப்பதற்காக அலமாரியைத் திறந்தான்.

அப்போது அந்த வீட்டின் முன் பக்கக் கதவை யாரோ இடிப்பது போன்ற ஓசை கேட்டது.

இதைக் கேட்ட திருடன் அஞ்சி நடுங்கினான்.

ஐயோ! அந்தத் திருடர்கள் கூட்டம்தான் வந்து விட்டது. அவர்கள் என்னைப் பார்த்தால் உயிருடன் விட மாட்டார்கள். என்ன செய்வேன்? இங்கே வந்து மாட்டிக் கொண்டேனே...” என்று புலம்பினான். இதைக் கேட்ட நீலகண்டன் நல்ல வாய்ப்பு கிடைத்தது என்று மகிழ்ந்தான்.

அந்தத் திருடனைப் பார்த்து, “திருடர்களிடம் இருந்து நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். அந்தக் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள். என்ன நடந்தாலும் வெளியே வராதே” என்றான்.

அதன்படியே “அந்தத் திருடன் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான். தன் மனைவியை அழைத்த நீலகண்டன்”அவள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னான்.

அவளும் தலையை ஆட்டினாள்.

நான் பின் பக்கத் கதவு வழியாக வெளியே செல்கிறேன். உதவிக்கு ஆட்களை அழைத்து வருகிறேன். அதுவரை நான் சொன்னது போலச் சமாளி. எதற்கும் அஞ்சாதே” என்ற அவன் அங்கிருந்து வேகமாகச் சென்றான்.

முன் பக்கத் கதவை உடைத்துக் கொண்டு ஐந்து திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கையில் கத்தியும், ஈட்டியும் வைத்திருந்தனர். பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தனர்.

அங்கே பெண் ஒருத்தி மட்டும் நின்றிருப்பதைப் பார்த்துத் திகைப்பு அடைந்தனர்.

என்ன? நீ மட்டும் தனியாக இருக்கிறாய். உன் கணவன் எங்கே?” என்று அவர்களில் ஒருவன் கத்தினான்.

அவள் அருகே வந்த இன்னொருவன், “உன் நகைகளை எல்லாம் தந்துவிடு. இல்லையேல் உன்னைக் கொன்று விடுவேன்” என்று மிரட்டினான்.

என்னக் கொன்று விடாதீர்கள். என்னால் இப்போது நகைகளை உங்களிடம் தர முடியாது” என்று கெஞ்சினாள் அவள்.

ஏன் தர முடியாது?” என்று மிரட்டினான் மற்றொருவன்.


நான் என்ன செய்வேன்? நகைகள் எல்லாம் அலமாரியில் வைத்துப் பூட்டப்பட்டு உள்ளன. சாவி என் கணவரிடம் உள்ளது” என்றாள்.

உன் கணவனிடம் சாவி உள்ளதா? அவன் எங்கே இருக்கிறான்?” என்று கத்தினான் முதலாம் திருடன்.

நடுங்கியபடியே அவள், “உங்களைப் பார்த்து அஞ்சிய அவர் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்” என்றாள்.

அப்போதுதான் அவர்கள் கட்டிலுக்கு அடியில் ஒருவன் ஒளிந்து இருப்பதை பார்த்தனர்.

ஏ கோழையே! நீயும் ஒரு ஆண்மகனா? மனைவியை எங்களிடம் சிக்க வைத்துவிட்டு, நீ ஒளிந்து கொண்டாயா? எழுந்து வெளியே வா” என்று கோபத்துடன் கத்தினான் அவர்களில் ஒருவன்.

ஐயோ! ஆபத்தில் சிக்கிக் கொண்டேனே என்று நடுங்கிய அந்தத் திருடன். வெளியே வரத் தயக்கம் காட்டினான்.

கோபத்துடன் கட்டிலைப் புரட்டிப் போட்ட அவர்கள் அவனைத் தூக்கினர்.

நான் அவள் கணவன் அல்ல... உங்களைப் போன்ற திருடன் நான். அவள் பொய் சொல்கிறாள். என்னிடம் எந்தச் சாவியும் இல்லை. நான் சொல்வதை நம்புங்கள்” என்று கதறினான்.

எங்களைப் பார்த்துவிட்டுக் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டாய். இவள் உன் மனைவி இல்லை என்கிறாய். திருடன் என்று சொல்லி எங்களை ஏமாற்றப் பார்க்கிறாய். இப்படிப்பட்ட கோழையை நாங்கள் இதுவரை பார்த்தது கிடையாது. இவனை உயிருடன் விடக் கூடாது” என்று கோபத்துடன் கத்திய அவர்கள். அவனை அடிக்கத் தொடங்கினர்.

அவர்களின் உதையைத் தாங்க முடியாத அவன், “நான் சொல்வதை நம்புங்கள். நான் இவள் கணவன் அல்ல” என்று கதறி அழுதான்.

அவர்களோ அவனை அடிப்பதை நிறுத்தவில்லை.

விரைந்து செயல்பட்ட நீலகண்டன் அரண்மனை வீரர்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்தான்.

எல்லாத் திருடர்களும் சிக்கிக் கொண்டனர். வீரர்கள் அவர்களைக் கைது செய்தனர்.

இப்படி எதிர்பாராமல் சிக்கிக் கொண்டோமே” என்று திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நீலகண்டனும், அவர் மனைவியும் சேர்ந்து செய்த சூழ்ச்சி அவர்களுக்குப் புரிந்தது.

நீலகண்டனிடம் வீரர்களின் தலைவன், “ஐயா! உங்களின் அறிவுக்கூர்மையால் தான் இவர்கள் எங்களிடம் சிக்கினர். எத்தனை நாட்களாக இவர்களைப் பிடிக்க முயற்சி செய்தோம் தெரியுமா? உங்களைப் எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை” என்றான்.

உதைபட்டு முனகிக் கொண்டே தரையில் கிடந்த முதலாம் திருடனை அவன் பார்த்தான்.

ஏன் இவனை இவர்கள் இப்படி அடித்து இருக்கின்றனர்? இவனும் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனா? இவனையும் கைது செய்யட்டுமா?” என்று கேட்டான்.

இவன் சிறிய திருடன். இவனுக்குத் தகுந்த தண்டனை கிடைத்து விட்டது. இனி இவன் திருட மாட்டான். இவனை விட்டுவிடுங்கள்” என்றான் நீலகண்டன்.

அடுத்த நாள் அரசவைக்கு வந்த நீலகண்டனை அரசர் பாராட்டினார். சொன்னது போலவே நூறு பொற்காசுகளை அவனுக்குப் பரிசாகத் தந்தார்.

அவனும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.

நன்றி தினமலர்!
அரசர் கதைகள் – திருடன்! அரசர் கதைகள் – திருடன்! Reviewed by Dinu DK on April 16, 2013 Rating: 5

1 comment:

Powered by Blogger.