சிறுவர் கதைகள் - அரண்மனைக் கோமாளி!

அரண்மனைக் கோமாளி! 

முன்னொரு காலத்தில் சந்தனபுரி நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் அரசவையில், விதூஷகன் வரதன் என்பவன் வேலை செய்து வந்தான். அவன் எப்போதும் அரசரை வேடிக்கையாக கேலி செய்து வந்தான். இதனால் அரசர் அவன் மீது கோபம் கொண்டார். அதனால் அவர் அமைதி குலைந்தது. படுக்கையில் படுத்த அவரால், தூங்க முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்தபடியே இருந்தார்.

கோபம் அடங்காத அவர் பற்களை நறநறவென்று கடித்தார். அருகிலிருந்த அரசி, “தூக்கம் வராமல் ஏன் இப்படித் துன்பப் படுகிறீர்?'' என்று கேட்டாள். “அதற்கு காரணம் விதூஷகன் வரதன் தான்!'' என்றார் அரசர்.

அரண்மனைக் கோமாளியா? அவன் மீதா இப்படிக் கோபம் கொண்டுள்ளீர். அவனை மன்னித்து விடுங்கள். உங்களை மகிழ்ச்சி படுத்தத்தான் அவன் அங்கே இருக்கிறான். அதற்காகத்தான் ஊதியம் வாங்குகிறான். நீங்கள் சிரிப்பதற்காக அவன் ஏதோ பேசி இருப்பான்'' என்றாள்.

நீ சொல்வது சரிதான். இருந்தாலும் அவன் வேலையை அவன் செய்வது இல்லை. என்னையே அடிக்கடி கேலி செய்கிறான். அதனால்தான் அவன் மீது கோபம்'' என்றான்.

உங்களை கேலி செய்யும் துணிவு அவனுக்கு வந்து விட்டதா? அப்படி என்ன கேலி செய்தான்?''

அதை உன்னிடம் சொல்ல வேண்டுமா?'' என்று கோபத்துடன் கேட்டார்.

உங்களை அவன் அவமானப்படுத்தி விட்டானா? நீங்கள் அவனை மன்னிக்க கூடாது. இந்த குற்றத்திற்காக, அவன் சாகத்தான் வேண்டும்'' என்றாள் அரசி.

இதைக் கேட்ட அவர் ஆறுதல் அடைந்தார்.

நானும் அப்படித்தான் நினைத்தேன். அவன் செத்தால்தான், மற்றவர்களுக்கு அது பாடமாக இருக்கும். யாரும் என்னைக் கேலி செய்யத் துணிய மாட்டர்'' என்றார். அதன் பிறகு அவர் தூங்கத் தொடங்கினார்.

எப்படியோ அவரைத் தேற்றி விட்டோம் என்று நினைத்து அரசியும் தூங்கினாள். பொழுது விடிந்தது. எழுந்த அரசர் விதூஷகன் வரதனை முதலில் அவமானப்படுத்த வேண்டும். பிறகு கொல்ல வேண்டும். "எப்படி அவமானப் படுத்திக் கொல்வது" என்று சிந்தித்தபடி இருந்தார்.

நல்ல திட்டம் ஒன்று அவருக்குத் தோன்றியது. அரசவைக்கு வந்த அவர் அரியணையில் அமர்ந்தார். வழக்கம் போல அங்கு வந்த விதூஷகன் வரதன் அவரை வணங்கினான்.

நன்றி கெட்டவனே! உனக்கு எவ்வளவு மதிப்பு தந்தேன்? நேற்று எல்லாரையும் சிரிக்க வைப்பதாக நினைத்து என்னை அவமானப்படுத்தி விட்டாய். இனிமேல் இப்படிச் சிரிக்க வைக்க நீ உயிருடன் இருக்கப் போவது இல்லை. உன்னை கொல்லப் போகிறேன்'' என்று கோபத்துடன் கத்தினார் அரசர்.

அரசே! நான் உங்களை அவமானப் படுத்துவேனா? நகைச்சுவைக்காக அப்படிப் பேசினேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கெஞ்சினான். “நீ பேசியதைக் கேட்டது போதும். இனி உன் பேச்சை யாரும் கேட்கப் போவது இல்லை'' என்ற அவர் காவலாளி ஒருவனைப் பார்த்தார்.

வீதியில் திரியும் நாய் ஒன்றை இங்கே இழுத்து வா'' என்றார். எலும்பும் தோலுமாக இருந்த நாய் ஒன்றைப் பிடித்து, இழுத்துக் கொண்டு வந்தான்.

தெரு நாயை அரசர் ஏன் இழுத்து வரச் சொன்னார் என்பது விதூஷகன் வரதனுக்கு புரியவில்லை.

"அந்த நாயை வைத்து அவர் என்ன தண்டனை தரப் போகிறார்? ஒன்றும் புரிய வில்லையே" என்று எல்லாரும் குழம்பினர்.


முட்டாளே! இந்தத் தெரு நாய்க்கும், உனக்கும் அதிக வேறுபாடு இல்லை. இந்த நாயை எங்கள் கண் முன்னால் நீ கொல்ல வேண்டும். அதே முறையில் நீயும் சாகப் போகிறாய்'' என்றார்.

இதைக் கேட்டு அவையில் இருந்த எல்லாரும் திகைத்தனர்.

"உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை. நாயை மண்டையில் அடித்துக் கொன்றால் அவனையும் அப்படியே கொல்வார். வயிற்றில் வாளைச் செருகினால் அவன் வயிற்றிலும் வாளைச் சொருகுவர். பாவம் அவன்" என்று நினைத்தனர்.

ஆனால், விதூஷகன் அமைதியாக இருந்தான்.

விதூஷகனே! நீ உயிர் பிழைக்க எந்த வாய்ப்பும் இல்லை. இந்த நாயைக் கொல்ல எந்தப் படைக் கருவியைப் பயன்படுத்தப் போகிறாய்? வாளா? ஈட்டியா? அம்பா?'' என்று கேட்டார். அவர் முகத்தில் புன்முறுவல் தெரிந்தது.

எல்லாரும் பதைபதைப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

நாயின் அருகே சென்றான் அவன் இரக்கத்துடன் அதை பார்த்தான்.

நாயே! என்னை மன்னித்து விடு. எனக்கு வேறு வழி தெரியவில்லை'' என்றான்.

அவன் அதை எப்படிக் கொல்லப் போகிறான் என்பதை எல்லாரும் ஆர்வமாகப் பார்த்தனர்.

அந்த நாயின் வாலைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துத் தூக்கினான். தலைக்கு மேல் அதைச் சுழற்றினான். அப்படியே அதைத் தூக்கி எறிந்தான்.

சுவரில் வேகமாக மோதிய அது அப்படியே இறந்து விழுந்தது.

அரசே! நீங்கள் சொன்னது போல இந்த நாயைக் கொன்று விட்டேன். அதே முறையில் நீங்கள் என்னைக் கொல்லலாம்'' என்றான்.

அதே முறையில் அவனைக் கொல்ல முடியாது என்பது அரசருக்கு புரிந்தது.

உன் அறிவுக்கூர்மையை மெச்சுகிறேன். உன்னை உயிருடன் விடுகிறேன். மீண்டும் என்னைக் கேலி செய்து என் கோபத்திற்கு ஆளாகாதே'' என்றார்.

அரசே! நன்றி. இனி கவனமாக நடந்து கொள்வேன்... தங்களை புண்படுத்த மாட்டேன்'' என்றான். அரசனும் மன்னித்து விட்டுவிட்டார்.

நன்றி தினமலர்! 
சிறுவர் கதைகள் - அரண்மனைக் கோமாளி! சிறுவர் கதைகள் - அரண்மனைக் கோமாளி! Reviewed by Dinu DK on March 15, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.