சிறுவர் கதைகள் - விழிப்புணர்வு

விழிப்புணர்வு:-

புகழ் பெற்ற குரு ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார். அப்போது சீடர்களின் தலைவனான மூத்த சீடன் குருவைப் பார்த்தான்.

"குருவே! நாங்கள் விழிப்புணர்வு பெறுவது எப்படி?'' என்று கேட்டான்.

"உங்களை அறிவால் நிரப்பிக்கொள்ளுங்கள்!'' என்றார்.

"அறிவால் நிரப்பிக்கொள்வது என்றால் எப்படி குருவே? புரியவில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்!'' என்றான் சீடன்.

"உங்களை அறிவால் நிரப்பிக்கொள்வது என்றால் பல நூறு ஓட்டைகள் கொண்ட ஒரு சல்லடையில், நீரை நிரப்புவது போன்றதாகும்!'' என்றார்.

"சல்லடையில் நீரை நிரப்புவதா? அதெப்படி முடியும் குருவே?'' என்றான் சீடன்.

"முயன்று பாருங்கள் முடிகிறதா? இல்லையா? என்பதை நாளை என்னிடம் சொல்லுங்கள்!'' என்றார்.

"சரி குருவே!''

சபை கலைந்தது. சீடர்கள் ஒன்றுகூடி சல்லடையில் நீரை எப்படி நிரப்புவது என்பது பற்றி கலந்து பேசத் தொடங்கினர்.

"செய்துதான் பார்ப்போமே!'' என்றான் சீடன்.
 
ஒரு பெரிய சல்லடை கொண்டு வரப்பட்டது.

ஒரு சீடன் அதில் நீரை ஊற்றினான். நீர் சல்லடை ஓட்டைகளின் வழியே வெளியேறியது.

"ஊஹூம்! இது சாத்தியமில்லை!'',
மறுபடியும் யோசித்தனர்.

"ஒரு யோசனை!'' என்றான் ஒரு சீடன்.

"என்ன?''

"சல்லடையில் ஐஸ்கட்டியை நிரப்பலாம்!''

"ஆஹா! அருமையான யோசனை. அது ஓட்டைகள் வழியே ஓடாது. அதுவும் திட நீர்தானே!''

"ஆமாம்! ரொம்ப சரி!'' சல்லடையில் ஐஸ் கட்டி நிரப்பப்பட்டது. சிறிது நேரம்தான்.

ஐஸ்கட்டி உருகி, ஓட்டைகள் வழியே நீராக ஓடிவிட்டது. சீடர்கள் சோர்ந்து போயினர்.

மறுநாள் குருவின் முன்னே தலை கவிழ்ந்து நின்றனர்.

"குருவே! சல்லடையில் நீரை நிரப்புவது சாத்தியமே இல்லை!'' என்றனர்.
குரு அவர்களைக் கூர்ந்து பார்த்தார்.

"சல்லடையை எடுத்துக்கொண்டு என்னோடு வாருங்கள்!'' என்று சொல்லிவிட்டு நடந்தார் குரு.

சீடர்கள் அவர் பின்னே ஓடினர்.

ஆசிரமத் தோட்டத்தில் சீடர்கள் குளிக்கும் பெரிய நீர்த்தொட்டியில் போட்டார். சல்லடை நீருக்குள் மூழ்கியது.

குரு சீடர்களைப் பார்த்தார்.

"இப்போது சல்லடையில் நீர் நிரம்பியிருக்கிறது அல்லவா?'' என்று கேட்டார் குரு.

"ஆமாம்!'' குரு சொன்னார்.

"விழிப்புணர்வு பெறுவது எப்படி என்று கேட்டீர்கள். அதைப் பெற அறிவு என்னும் கடலில் உங்களைத் தூக்கிப் போடுங்கள்... அறிவு உங்களைவிட்டு விலகி ஓடிவிடாது!'' என்றார் குரு.

சீடர்களுக்குத் தெளிவு பிறந்தது.
சிறுவர் கதைகள் - விழிப்புணர்வு சிறுவர் கதைகள் - விழிப்புணர்வு Reviewed by Dinu DK on December 09, 2012 Rating: 5

No comments:

Powered by Blogger.