அரசர் கதைகள் - அறிவுக்கூர்மை

அறிவுக்கூர்மை:-

அரசர் கிருஷ்ண சந்திரருக்கு அடுத்தடுத்து மகள்கள் பிறந்தனர். தனக்குப் பின் ஆட்சி செய்ய ஒரு மகன் இல்லையே என்று கவலைப்பட்டார். பல கோவில்களுக்குச் சென்று அவரும், அரசியும் வழிபட்டனர்.

அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனக்கு மகன் பிறந்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

அரண்மனையே விழாக் கோலம் பூண்டது. இளவரசனைப் பார்ப்பதற்காக, மக்கள் எல்லாரும் அரண்மனைக்கு வந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக இளவரசனைப் பார்த்து விட்டுச் சென்றனர்.

அங்கு வந்த கோபால் இளவரசனைப் பார்த்தான்.

"அரசே! இளவரசரின் முகம் மிகுந்த பொலிவுடன் விளங்குகிறது. அறிவிலும், வீரத்திலும் ஈடு இணையற்றவராக விளங்கப் போகிறார். உங்களை விடப் பேரும், புகழும் பெறப் போகிறார்'' என்றான்.

அங்கிருந்த அமைச்சர்கள் இதைக் கேட்டனர். "கோபாலைச் சிக்கலில் மாட்ட வழி கிடைத்தது" என்று நினைத்தனர்.

"அரசே! உங்களை மகிழ்ச்சிப்படுத்தப் பொய் சொன்னால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? அவர்களை நீங்கள் நம்புவீர்களா? அது ஏமாற்றுவது போல ஆகாதா? அப்படிப்பட்டவர்களை தண்டிக்க வேண்டாமா?'' என்று கேட்டனர்.

அவர்கள் எதற்காக அப்படிப் பேசுகின்றனர் என்பது அரசருக்குப் புரிந்தது.

"கோபால் அப்படிப்பட்டவன் அல்ல... யாரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பொய் சொல்லமாட்டான். இதை அவனை வைத்தே, நிரூபிக்க வேண்டும்" என்று நினைத்தார்.

"கோபால்! நீ உண்மையிலேயே என் மகனின் எதிர்காலத்தைச் சொன்னாயா? என்னை மகிழ்ச்சிப்படுத்த இப்படிப் பேசினாயா?''

"அரசே! யாரையும் மகிழ்ச்சிப்படுத்த நான் பொய் சொல்ல மாட்டேன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பர். இளவரசரின் திருமுகம் அவர் பேரும், புகழும் பெறப் போகிறார் என்பதைக் காட்டுகிறது. நான் சொல்வது முழுக்க, முழுக்க உண்மைதான்,'' என்றான் கோபால்.

இதைக் கேட்ட அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அமைச்சர்கள் நிறைவு அடையவில்லை.

அரசரைத் தனியே சந்தித்த அவர்கள், "அரசே! எதிர் காலத்தைச் சொல்லும் ஞானி என்றா கோபாலை நினைக்கிறீர்? அவன் சொன்னது முழுப் பொய். நாங்கள் சொல்வது போல அவனுக்கு ஒரு சோதனை வையுங்கள். அவன் குட்டு வெளிப்பட்டு விடும்'' என்றனர்.

"நீங்கள் பொறாமையால் இப்படிப் பேசுகிறீர்கள். நான் கோபாலை நம்புகிறேன். என்ன சோதனை சொல்லுங்கள் வைக்கிறேன்'' என்றான்.

"அரசே! ஒரே அளவு ஒரு வடிவம் உள்ள இரண்டு பானைகளைக் கொண்டுவரச் சொல்லுங்கள். இரண்டிற்கும் எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. ஒரு பானை நிறைய பொற்காசுகள் இருக்க வேண்டும். இன்னொன்று காலியாக இருக்க வேண்டும். இரண்டின் வாயையும் துணியால் இறுகக் கட்ட வேண்டும்.

உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியக் கூடாது. இரண்டையும் கயிற்றால் அருகருகே கட்டி இங்கே தொங்க விடுங்கள். கோபால் வந்ததும் இரண்டு பானைகளையும் காட்டுங்கள். ஒன்று காலிப்பானை. இன்னொன்று பொற்காசுகள் நிறைந்த பானை. இவற்றின் அருகே சென்று கூர்ந்து பார்க்கலாம். எது காலிப்பானை எது பொற்காசுப் பானை என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்'' என்றனர்.

அதன்படியே இரண்டு பானைகள் அங்கே கட்டித் தொங்க விடப்பட்டன. ஏவலர்களிடம் கோபாலை, அழைத்து வரச் சொன்னார் அரசர். சிறிது நேரத்தில் கோபால் அங்கு வந்தான்.

"கோபால்! ஒருவரைப் பார்த்த உடனே அவரின் எதிர்காலத்தைச் சொல்கிறாய். அதே போலப் பொருள்களைப் பார்த்ததும், உன்னால் சொல்ல முடியுமா என்பதை, அறிய உனக்கு ஒரு சோதனை வைத்திருக்கிறேன்'' என்றார்.
"அரசே! என்ன சோதனை? சொல்லுங்கள்'' என்றான்.

"கோபால்! அங்கே இரண்டு பானைகள் தொங்குகின்றன. ஒன்று காலிப் பானை. இன்னொன்று பொற்காசுகள் நிரப்பப்பட்ட பானை. நீ அந்தப் பானைகளைத் தொடக் கூடாது. எது காலி பானை? எது பொற்காசுப் பானை என்று கண்டு பிடித்து சொல்ல வேண்டும். நீ பிறரைப் புகழப் பொய் சொல்பவன் அல்ல. இதை இந்தச் சோதனையால் அறிந்து கொள்வேன்'' என்றார் அரசர்.

பானைகளைத் தொடக்கூடாது. எது காலிப்பானை? எது பொற்காசுப் பானை? என்று கண்டுபிடிக்க வேண்டும். கடினமான சோதனை தான் என்பது அவனுக்குப் புரிந்தது. எப்படியும் கண்டுபிடித்து விடலாம். வழி இல்லாமலா போகும் என்று சிந்தனையில் ஆழ்ந்தான் அவன்.

"கோபால் நீ இந்தச் சோதனையில் வெற்றி பெற்றால், பானையில் உள்ள பொற்காசுகள் அனைத்தும் உனக்கே. தோல்வி அடைந்தால் அதே அளவு பொற்காசுகளை நீ தர வேண்டும்'' என்றார் அரசர்.

வழி கண்டுபிடித்த மகிழ்ச்சியில் சிரித்தபடியே பானைகளின் அருகே சென்றான். ஒவ்வொரு பானையையும் உற்றுப் பார்த்தான்.

அங்கிருந்த அமைச்சர்கள் அவன் தோற்று அவமானப்படப் போகிறான். இந்தச் சோதனையில் அவனால் வெற்றி பெற முடியாது! என்று அவனை ஆணவத்துடன் பார்த்தனர்.

அவர்கள் எண்ணம் கோபாலுக்குப் புரிந்தது. அவர்களைப் பொருட்படுத்தாத அவன் பானைகளையே பார்த்தபடி இருந்தான்.

இரண்டு பானைகளுக்கும் நடுவே நின்ற அவன், "அரசே! என் வலது பக்கம் உள்ள பானை பொற்காசுப் பானை. இடப் பக்கம் உள்ள பானை காலிப் பானை,'' என்றான்.

"கோபால்! உறுதியாகத்தான் சொல்கிறாயா அல்லது குருட்டாம் போக்கில் சொல்கிறாயா?'' என்று கேட்டார்.

"அரசே! உங்கள் மகன் உங்களை விட பேரும், புகழும் பெறுவான். அதே உறுதியுடன்தான் இந்தப் பானை பொற்காசுப் பானை, இந்தப் பானை காலிப் பானை என்கிறேன்'' என்றான்.

"கோபால்! உன் மீது இவர்கள் பொறாமை கொண்டனர். அவர்களுக்காகத்தான் இந்தச் சோதனை வைத்தேன். நீ எப்படிப் பொற்காசுப்பானையையும், காலிப்பானையும் கண்டுபிடித்தாய்? இரண்டும் ஒன்று போலவே உள்ளனவே'' என்றார்.

"அரசே! இதை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். பொற்காசுப் பானை எடை அதிகமாக இருக்கும். காலிப் பானை அவ்வளவு எடை இருக்காது. கயிற்றில் தொங்கும் போது எடை அதிகமான பானை சிறிது தாழ்வாகத் தொங்கும். உற்றுக் கவனித்தால் இதனை தெரிந்து கொள்ளலாம்.

அந்த ஒன்றை மட்டும் வைத்து நான் இந்த முடிவுக்கு வரவில்லை. 

பானைகளுக்கு அருகே சென்ற நான், மூச்சை இழுத்து வேகமாக ஊதினேன். காலிப் பானை சிறிது அசைந்தது. பொற்காசுப் பானை அசையவே இல்லை. நான் ஏமாற்றத்துடன் பெருமூச்சு விடுவதாக நீங்கள் அனைவரும் நினைத்தீர்கள்'' என்று நடந்ததை விளக்கமாகச் சொன்னான்.

"கோபால்! உன் அறிவுக்கூர்மையை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. பானையில் உள்ள பொற்காசுகள் அனைத்தையும் நீயே எடுத்துக் கொள்!'' என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.

கோபாலும், அவருக்கு நன்றி சொல்லி விட்டு, பொற்காசுப் பானையை எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு சென்றான்.

தங்கள் திட்டம் இப்படியாகி விட்டதே, கோபாலுக்கு மேலும் பரிசும், புகழும் கிடைத்து விட்டதே, என்று தலை கவிழ்ந்தனர் அமைச்சர்கள்.

Source : தினமலர்
அரசர் கதைகள் - அறிவுக்கூர்மை அரசர் கதைகள் - அறிவுக்கூர்மை Reviewed by Dinu DK on November 24, 2012 Rating: 5

No comments:

Powered by Blogger.