சிறுவர் கதைகள் - மொட்டை தலை!

மொட்டை தலை!

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு எதை யாரிடம் கேட்க வேண்டும் என்ற விவஸ்தை கிடையாது. இடம், பொருள், ஏவல் என்று எதுவும் தெரியாமல் கண்ணில் பட்டோரிடம் கண்டதையும் கேட்டு விடுவான். அதனால் அவனை, "வெகுளி அரசன்' என்றே பலரும் கருதினர். அந்த மாதிரிதான் அவரும் நடந்து கொள்வார்.

ஒரு சமயம், அந்த அரசனுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது. உடனே மந்திரியை அழைத்தான்.

அமைச்சரே, எனது முழங்காலில் வலி ஏற்பட்டுள்ளது. அப்படியும் இப்படியும் காலை அசைக்க முடிய வில்லை. என்ன செய்யலாம்?'' என்று ஆலோசனை கேட்டான்.

மந்திரி ஒரு கணம் தீவிரமாக யோசித்தான்.

எந்த ஒரு விஷயமானாலும் அது சிறிதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, நம் அரண்மனை குருவிடம் கேட்டுத்தானே செய்கிறோம். அதனால் அந்த முழங்கால் வலி பற்றியும் அவரிடம் கேட்கலாம். அவர் என்ன சொல்கிறாரோ? அதன்படி செய்வதே நல்லது,'' என்றார் அமைச்சர்.

அமைச்சர் சொல்வது சரியென அரசனுக்குப் பட்டது. அதனால் அவர், அரண்மனை குருவை அழைத்து வரும்படி தனது சேவகர்களுக்கு உத்தரவிட்டான். அரச குருவை அழைத்து வரச் சேவகர்கள் உடனே புறப்பட்டனர்.

சிறிது நேரத்தில் அரச குரு அங்கு வந்து சேர்ந்தார்.

என்னை அழைத்த காரணம் என்னவோ, நான் தெரிந்து கொள்ளலாமா?'' எனக் குரு, அரசனைப் பார்த்து கேட்டார்.

குருவே! எனது முழங்காலில் வலி உண்டாகியுள்ளது. அதைப் போக்க வழி ஏதேனும் சொல்லுங்கள்,'' என்று குருவைப் பார்த்து கேட்டார் அரசன்.

அரசே! அரண்மனை வைத்தியரைக் கேட்டால்தான் நல்ல வழி தெரியும். இருந்தாலும் நான் கேள்விப்பட்ட ஒரு செய்தியைச் சொல்கிறேன். பொடுதலையை வச்சுக்கட்டினா முழங்கால் வலி நீங்கி விடும்,'' என்று கூறி விட்டு, குருநாதர் அரசனிடமிருந்து விடைபெற்றுச் சென்று விட்டார்.

உடனே அரண்மனை வைத்தியரை அழைத்து வரும்படி சேவகர்களை அனுப்பி வைத்தான் அரசன். சேவகர்களும் அரண்மனை வைத்தியரின் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர்.

அரசனுக்கு முழங்கால் தாங்க முடியாத அளவுக்கு வலித்தது. அரண்மனை வைத்தியர் வரும் வரை வலியைத் தாங்க முடியாமல் துடித்தான். அப்போது அங்கே பண்டிதன் ஒருவன் வந்தான்.

குருநாதர் சொன்னபடி பொடுதலை வைத்துக் கட்ட வேண்டும்!'' என்று அவரிடம் கேட்டான் அரசன்.

அந்த பண்டிதனுக்குத் தமிழே அரைகுறை, வைத்தியம் என்றால் என்னவென்றே தெரியாது.

"பொடுதலை' என்றவுடன் தனது கையில் இருந்த அகராதியைப் பிரித்து பொடுதலைக்குப் பொருள் கண்டறிந்தார்.

பின்னர், பண்டிதன் அரசனைப் பார்த்து, “அரசே! பொடுதலை என்றால் முடியில்லாத தலை, என அகராதியில் குறிப்பிடப் பட்டுள்ளது,'' என்று கூறினான்.

பண்டிதன் கூறியதைக் கேட்ட அரசன் உடனே காவலர்களை அழைத்து, “யாராவது தலையில் முடியில்லாமல் சென்றால் உடனே பிடித்துக் கொண்டு வாருங்கள்,'' என ஆணை பிறப்பித்தான்.

அரசனின் ஆணையைச் சிரமேற்கொண்டு காவலர்கள் சாலையில் சுற்றும் முற்றும் பார்த்தனர். அப்போது அந்த வழியாக மொட்டைத் தலையன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். உடனே காவலர்கள் அவனைப் பிடித்துச் சென்று அரசனின் முன் நிறுத்தினர்.

அரசனும், “சரி....சரி.... உடனே நம் குருநாதர் சொன்னபடி செய்யுங்கள்,'' என்று கட்டளையிட்டார்.

வந்திருந்த மொட்டைத்தலை ஆசாமிக்கு எதுவுமே விளங்கவில்லை. "குருநாதர் என்ன சொன்னார்? அரசன் நம்மைப் பிடித்து வரும்படி ஏன் கட்டளையிட்டார்? நம்மை என்ன செய்யப் போகிறார்கள்?' என்ற கேள்விகள் மொட்டைத் தலையனின் உள்ளத்தில் எழுந்து அவனைக் குழப்பம் அடையச் செய்தன.

உம்... சீக்கிரம் அவன் தலையை எடுத்துக் கொண்டு வாருங்கள்,'' என்று அரசர் கோபமாகக் கூறினான். அப்போது அரண்மனை வைத்தியர் மருந்துடன் அங்கே வந்துவிட்டார். அரசனின் காலுக்கு மருந்தை வைத்து நன்றாக கட்டிவிட்டார்.

பிறகு அரசனிடம்அரசே! இந்த மொட்டைத் தலையனின் தலையை வெட்டிக் கொண்டு வரும்படி ஏன் கட்டளையிட்டீர்கள்?'' என்று கேட்டார் வைத்தியர்.

வைத்தியரே, உங்களை அழைத்து வரும்படி காவலர்களை அனுப்புவதற்கு முன், அரண்மனை குருநாதரிடம் ஆலோசனை கேட்டேன். அவர் பொடுதலை வச்சுக் கட்டினா முழங்கால் வலி சரியாகப் போய்விடும் என்று கூறினார். மேலும், எதற்கும் வைத்தியரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள் என்று குருநாதர் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். அதன் பிறகுதான் உங்களுக்கு ஆள் அனுப்பினேன். நீங்கள் வருவதற்குச் சற்று தாமதம் ஆனதால் என்ன செய்வதென்று யோசனை செய்தேன்,'' என்று கூறி அரசன் தன் பேச்சைப் பாதியில் நிறுத்தினான்.

அப்புறம் என்ன நடந்தது அரசே?'' என்று கேட்டார் வைத்தியர்.

அப்புறம்... அங்கிருந்த அரைகுறைப் பண்டிதனிடம், "பொடுதலை' என்றால் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் தனது கையில் இருந்த அகராதியைப் பார்த்து, அரசே, பொடுதலை என்றால் முடியில்லாத தலை என்று அர்த்தம் என கூறினான். அவன் கூறியபடியே ஒரு மொட்டைத் தலையனைக் கண்டுபிடித்து அவனது தலையை வெட்டி, அதனை எனது முழங்காலில் கட்டினால் முழங்கால் வலி போய்விடும் என்று எண்ணி இவ்வாறு செய்தேன்,'' என்று விளக்கமாகக் கூறினான் அரசன்.

அரசன் இவ்வாறு கூறியதைக் கேட்ட வைத்தியர் கலகலவெனச் சிரித்தார்.
வைத்தியரே, ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்று கேட்டார் அரசன்.

அரசே! பொடுதலை என்றால் ஒரு சக்தி வாய்ந்த மூலிகை இலை. அதை நசுக்கி முழங்காலில் வைத்துக் கட்டினால் வலி நீங்கிவிடும்,'' என்று கூறினார் வைத்தியர்.

இதைக் கேட்ட அரசன் பேந்தப் பேந்த விழித்தான். ஆனால், மொட்டைத் தலையனோ வைத்தியரைப் பார்த்து, “ஐயா, சரியான நேரத்தில் வந்து என் உயிரை காப்பாற்றினீர்கள். நீங்கள் மட்டும் வரவில்லை என்றால், இந்நேரம் என் தலையை வெட்டி, கசக்கி அரசனின் முழங்காலில் வைத்துக் கட்டியிருப்பார்கள். நல்லவேளை, என் உயிர் தப்பியது,'' என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

அதிலிருந்துதான், “மொட்டைத் தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுப் போடாதேஎன்ற பழமொழி உருவானது குட்டீஸ்!

நன்றி தினமலர்!
 


சிறுவர் கதைகள் - மொட்டை தலை! சிறுவர் கதைகள் - மொட்டை தலை! Reviewed by Dinu DK on September 16, 2012 Rating: 5

No comments:

Powered by Blogger.