சிறுவர் கதைகள் - முட்டாள் பையன்!

முட்டாள் பையன்!

முன்னொரு காலத்தில், ஒரு கிழவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர்களில் இரண்டு பேர் புத்திசாலிகள்; மூன்றாமவன் முட்டாள். அவன் பெயர் சுந்தரம். வெதுவெதுப்பான கணப்பு அடுப்பு மேடையில் இரவு, பகலாக அவன் படுத்து உறங்கிக் கொண்டிருப்பான்.

கிழவர் தனது வயல்களில் நெல் விதைத்திருந்தான். விரைவில் அது வளர்ந்து விட்டது. ஆனால், ஒவ்வொரு இரவும் அங்கு யாரோ வந்து நெற்பயிரை நாசம் செய்து வந்தனர்.

குழந்தைகளே, இரவில் நீங்கள் காவல் காத்துத் திருடனை, கையும் களவுமாய்ப் பிடித்து வாருங்கள்,'' என்று கிழவர் கூறினார்.

இரண்டு புத்தசாலிப் புதல்வர்களும், நெற் பயிரை காவல் காப்பதற்காக முதலில் சென்றனர். ஆனால், இரவு முழுவதும் நன்றாய்த் தூங்கிவிட்டு, வீட்டுக்குத் திரும்பினர்.

நாங்கள் இரவு முழுவதும் விழித்திருந்தோம். திருடர்கள் யாரும் வரவில்லை,'' என்று பொய் கூறினர்.

பிறகு முட்டாளின் முறை வந்தது. தோல்வார் சுருக்குக் கண்ணி ஒன்றை எடுத்துக் கொண்டு அவன் கிளம்பினான். வயலுக்குப் பக்கத்தில் ஒரு கல் இருப்பதைப் பார்த்தான். அதன்மீது உட்கார்ந்து தூங்காமல் காவல் காக்க ஆரம்பித்தான்.

நள்ளிரவானதும் சாம்பல் நிறமும், பொன்னிறமும் கொண்ட ஒரு குதிரை நாலுகால் பாய்ச்சலில் ஓடி வந்தது. அதன் குளம்படியில் பூமி அதிர்ந்தது. அதன் நாசித் துவாரங்களிலிருந்து புகை வெளிவந்தது. கண்களிலிருந்து நெருப்புப் பொறிகள் பறந்தன. அந்தக் குதிரை மேய ஆரம்பித்தது. ஆனால், அது பயிரைத் தின்றதை விட அழித்ததுதான் மிக அதிகம்.

முட்டாள் பதுங்கி பதுங்கிச் சென்று, குதிரை மீது கண்ணியை வீசினான். அதில் சிக்கிய குதிரை அவனிடம் மன்றாடியது.

என்னை விட்டு விடுங்கள், உனக்கு விசுவாசமாக சேவை செய்கிறேன்,'' என்றது.

உன்னை நான் எப்படி நம்புவது?'' என்று முட்டாள் கேட்டான்.

கிராமத்தின் எல்லைக்கு வந்து, மூன்று முறை விசில் அடித்து, "தவிட்டு நிறக் குதிரையே, வெள்ளைப் புரவியே' இங்கு வந்து என் விருப்பத்தை நிறைவேற்று, என்று கூவினால், நான் வந்து விடுவேன்!'' என்றது குதிரை.

நெல் வயலில் வந்து மீண்டும் மேய்வதில்லை என்ற வாக்குறுதி பெற்றுக் கொண்டு, சுந்தரம் அந்தக் குதிரையை விட்டு விட்டான்.

சுந்தரம் வீட்டுக்குத் திரும்பியதும், “என்ன முட்டாளே, எதையாவது பார்த்தாயா?'' என்று சகோதரர்கள் கேலியுடன் கேட்டனர்.

நான் திருடனைப் பிடித்தேன். அது ஒரு குதிரை; நமது பயிர்களுக்கு இனிமேல் சேதம் விளைவிப்பதில்லை என்று வாக்குறுதி தந்த பின், நான் அதனை விட்டு விட்டேன்,'' என்றான்.

சகோதரர்கள் சிரித்தனர்.

தூங்குமூஞ்சி நல்ல கனவு கண்டிருப்பான்!'' என்று கூறிப் பகடி செய்தனர்.
ஆனால், அன்றைய இரவுக்குப் பிறகு யாரும் வந்து நெற்பயிரை சேதப்படுத்த வில்லை.

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு அரசனின் தூதர்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று, பின்வரும் செய்தியை அறிவித்தனர்.

அரசர் மூன்று நாள் விழா ஒன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளார். அந்த விழாவுக்கு வருமாறு அழைக்கிறார். குதிரை மீதேறி இளவரசியின் கூடத்துக்கு முதலில் சென்று, யார் அவளிடமிருந்து மோதிரத்தைப் பெற்று வருகிறாரோ அவருக்கு அவளைத் திருமணம் செய்து தருவதாக அறிவிக்கிறார்,'' என்று அறிவித்தான்.

சுந்தரத்தின் சகோதரர்களும் அங்கு செல்ல ஆயத்தமாயினர். இளவரசியைக் கைப்பிடிக்கும் போட்டியில் கலந்து கொள்வது அவர்களது நோக்கமல்ல. அதற்குப் பதில் வேடிக்கை பார்ப்பதற்காகவே, அவர்கள் அங்கு செல்ல விரும்பினர். தன்னையும் அழைத்துச் செல்லும்படி மன்றாடினான் சுந்தரம்.
ஆனால், அவர்கள் கேலியாகச் சிரித்தனர்.

உன்னைப் போன்று முட்டாள் அங்கு வந்து என்ன செய்ய முடியும்? மேலும், அவர்கள் உன்னை கண்டால் நகைப்பர். பேசாமல் உன் கணப்பு அடுப்பின் மீது போய் படுத்துத் தூங்கு,'' என்று கூறினர்.

சகோதரர்கள் சென்றதும், தான் காளான் பறிக்கப் போவதாக, தந்தையிடம் கூறிவிட்டு, கிராம எல்லையைக் கடந்து, மூன்று முறை விசில் அடித்து, “தவிட்டு நிறக் குதிரையே, வெள்ளைப் புரவியே, இங்கு வந்து என் விருப்பத்தை நிறைவேற்று,'' என்று கூவினான்.

உடனே, பூமி அதிர ஆரம்பித்தது. அடுத்த கணம் அங்கு குதிரை நின்று கொண்டிருந்தது.

குதிரையை பார்த்து, தன் விருப்பத்தை கூறினான்.

நல்லது. என் வலது காதுக்குள் நுழைந்து இடது காது வழியாக வெளியே வா,'' என்றது குதிரை.

அவ்வாறே, குதிரையின் வலது காதில் ஏறி இடது காதில் வெளி வந்தான். இதுவரை உலகம் கண்டிராத அழகனாக அவன் காட்சி யளித்தான். பிறகு அவன் குதிரை மீது ஏறி அரசர் ஏற்பாடு செய்திருந்த விழாவுக்குச் சென்றான். அரண்மனைச் சதுக்கத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. இளவரசி அழகே உருவெடுத்தவளாகத் தனது அறையில் ஜன்னல் அருகே அமர்ந்திருந்தாள்.

விரலில் விலை மதிப்பு உள்ள மோதிரம் அணிந்திருந்தாள். தமது கழுத்தை முறித்துக் கொள்ள விரும்பாததால், யாரும் அவளை நெருங்க முயற்சிக்கவில்லை. ஆனால், சுந்தரம் தனது குதிகால்களைக் குதிரையின் விலாக்களில் குத்தினான்.

குதிரை சீற்றமடைந்து காற்று வேகத்தில் பறந்து வந்து இளவரசி அமர்ந்திருந்த ஜன்னலின் முன்னால் நின்றது. சுந்தரம் அவள் விரலில் இருந்த மோதிரத்தைச் சட்டென்று கழற்றிக் கொண்டு, குதிரையைத் திரும்பி மறைந்து போனான்.

அவன் வீடு திரும்பியபோது, அவனது ஒரு கை கந்தல் துணியால் கட்டுப் போடப்பட்டிருந்தது.

என்ன இது?'' என்று அவனுடைய சகோதரர்கள் விசாரித்தனர்.

ஒன்றுமில்லை, காளான்கள் பறித்துக் கொண்டிருக்கையில் ஒரு முள் குத்தி விட்டது,'' என்று பதில் அளித்தான்.

மூன்று நாட்களுக்குப் பிறகு அரசனின் தூதர்கள் மீண்டும் வந்தனர். அரசர் ஒரு பெரிய விருந்து நடத்துவதாகவும் அதற்கு எல்லாரும் வர வேண்டும் என்று இம்முறை கூறினர். கிழவன் தனது குடும்பத்தார் அனைவரும் வயிறு நிறைய சாப்பிட்டனர். விருந்தின் இறுதியில், இளவரசி விருந்தினர்களிடையே சென்று ஒவ்வொருவருக்கும் குளிர்பானம் ஊற்றினாள். முடிவில், சுந்தரத்திடம் வந்தாள். அவன் கந்தல் ஆடை உடுத்தியிருந்தான். முகமெல்லாம் கரியாக இருந்து. கையில் கட்டுப் போட்டிருந்தான்.

ஏன் உங்கள் கையில் கட்டு போடப்பட்டிருக்கிறது என்று கட்டை அவிழ்த்தாள். உள்ளே விரலில் விலைமதிப்பற்ற மோதிரம் மினுமினுத்துக் கொண்டிருந்தது. இளவரசி அவன் கையைப் பிடித்துக் கொண்டு, தன்னுடைய தந்தையிடம் சென்றாள்.

இவர்தான் என் எதிர்காலக் கணவர்,'' என்று கூறி, அந்த மோதிரத்தைக் காட்டினாள்.

அரசன் மகிழ்ந்தான். அவர் பணியாட்களை அழைத்து சுந்தரத்தை அலங்கரிக்க சொன்னார்.
அரசனின் பணியாட்கள் சுந்தரத்தை நன்கு குளிப்பாட்டினர். விலை உயர்ந்த ஆடைகளை அவனுக்கு அணிவித்தனர். இப்போது அவன் வனப்பும், வசீகரமுமிக்க வாலிபனாகத் தோற்றமளித்தான்.

அவனுடைய தந்தைக்கும், சகோதரர்களுக்கும் அவர்களது கண்களையே நம்ப முடியவில்லை.

சுந்தரத்துக்கும், இளவரசிக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

நன்றி தினமலர்!

சிறுவர் கதைகள் - முட்டாள் பையன்! சிறுவர் கதைகள் - முட்டாள் பையன்! Reviewed by Dinu DK on September 16, 2012 Rating: 5

No comments:

Powered by Blogger.