அச்சம்!
ஒரு மடத்தில் துறவி ஒருவர் இருந்தார்.
நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்று
வந்தனர்.
சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர், “எல்லாத் தீமைகளுக்கும் அச்சம்தான் அடிப்படைக் காரணம்; அச்சத்தால் வெறுப்பு வருகிறது; பகை ஏற்படுகிறது; பேராசை உண்டாகிறது; அதனால் நாம் எந்தச் சூழலிலும் அச்சப்படக் கூடாது,'' என்றார்.
குறுக்கிட்ட
சீடர் ஒருவர், “ஐயா! அச்சத்தால் பேராசை
உண்டாகும் என்கிறீர்கள். இதை என்னால் ஏற்றுக்
கொள்ள முடியவில்லை,'' என்றார்.
அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.
அப்போது துறவியிடம் வந்த சமையல்காரர், “மடத்தில் அரிசி தீர்ந்து விட்டதை நான் கவனிக்கவில்லை. இருந்த அரிசியை வைத்து இரவு சமையலை முடித்துவிட்டேன். நாளை நகரத்திற்குச் சென்று அரிசி வாங்கி வந்தால்தான், சமையல் செய்ய முடியும். நண்பகலில் தான் உணவு தயாராகும். காலை உணவு சமைக்க வழி இல்லை,'' என்றார்.
பிறகு அவர் எல்லாருக்கும் உணவு பரிமாறினார்.
துறவியும், சீடர்களும் உண்டு முடித்தனர்.
சீடர்களைப் பார்த்து துறவி, “இன்று நீங்கள் அனைவரும் வழக்கத்தை விட அதிகமாகச் சாப்பிட்டு உள்ளீர்கள் ஏன்?'' என்று கேட்டார்.
“நாளை காலையில் உணவு கிடையாது என்று சமையல்காரர் சொன்னார். காலையில் பட்டினி கிடக்க வேண்டி இருக்கும். அதனால், இப்போது அதிகமாகச் சாப்பிட்டு விட்டோம்,'' என்றார் சீடர்களில் ஒருவன்.
“நாளை காலையில் உணவு கிடைக்காது என்று அச்சம் கொண்டீர்கள். அதனால் வழக்கத்தை விட அதிகமாகச் சாப்பிட்டீர்கள். அச்சத்தால் பேராசை வரும் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா?'' என்றார் துறவி.
பாடம் : அச்சத்தால் பேராசை வரும் என்பதை ஒப்புக் கொண்டனர் சீடர்கள்.
Source : தினமலர்
சிறுவர் நீதிக்கதைகள் - அச்சம்!
Reviewed by Dinu DK
on
August 10, 2012
Rating:

No comments: