சிறுவர் நீதிக்கதைகள் - பாட்டி வடை சுட்ட கதை

பாட்டி வடை சுட்ட கதை

ஒரு ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். ஒரு நாள் அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையை திருடி வாயால் தூக்கிச் சென்று உண்பதற்காய் மரக்கிளையில் அமர்ந்தது.

அதே பகுதியில் உலாவிக் கொண்டிருந்த நரிக்கு அன்று உணவு எதுவும் கிடைக்கவில்லை என்பதை விட ஏய்த்துப் பிழைக்க யாரும் தென்படவில்லை என்பதே உண்மை.பலத்த ஏமாற்றத்தோடு அங்கும் இங்கும் அலைந்த நரிக்கு மரத்தின் மீது அமர்ந்திருந்த காக்கை மீது பார்வை சென்றது. அதன் வாயில் ஒரு பெரிய வடை இருப்பதைப் பார்த்து நாவில் எச்சில் ஊற 'இன்றைய நிலைமைக்கு இது போதுமே' என நினைத்த நரிக்கு 'நரிப்புத்தி' டக்கென்று வேலை செய்ய தொடங்கியது.

காகத்தை அண்ணாந்து பார்த்து காகமே காகமே நீ நன்றாக பாடுவாயாமே உனது இனிய வாயால் ஒரு பாட்டுப் பாடேன் எனது களைப்புக்கு உனது பாடல் இதமாக இருந்தால் நன்றியோடு இருப்பேன்' என்றது.

காகமோ அதன் தந்திரம் புரியாமல் கா...கா...கா...” என கரைந்தது. வடை கீழே விழுந்தது. நரி 'நரிச் சிரிப்போடு' வடையைத் தூக்கிக் கொண்டு மெல்ல நகர்ந்தது. காகம் ஏமாந்ததை எண்ணி வருந்தியது.

காக்கா மீண்டும் பாட்டியிடம் ஒரு வடையை திருடிச் சென்று உண்பதற்காய் மரக்கிளையில் அமர்ந்தது. நரி மீண்டும் வந்து காகத்தைப் பார்த்து 'காகமே காகமே உனது பாடலைப் போலவே நீ தந்த வடையும் மிகவும் சுவையாக இருந்தது. உனது நல்ல குணத்திற்கு யார் ஈடாக முடியும். களைப்பாற பாடலை கேட்ட எனக்கு நான் பசியோடு இருப்பதை உணர்ந்து வடையும் கொடுத்தாயே பார்... அது தான் நீ' என புகழுரைத்தது.

காகத்துக்கு தடுமாற்றம் 'உண்மையில் நான் தான் தவறு செய்து விட்டேனோ' என எண்ணியது. நரியின் தந்திரம் புரிவது போலவும், புரியாதது போலவும் அதற்கு இருந்தது.

இதை உணர்ந்த நரியின் நரி மூளை' உடனடியாகச் செய்யல்படத் தொடங்கியது. காகமே! உனது பாடலில் ஒரு சில சொற்களின் அர்த்தம் புரியவில்லை இன்று ஒருதரம் பாடுவாயேயானால் அர்த்தமும் புரியும் களைப்பும் தீரும்' என்றது.

காகத்தின் சிறு மூளைக்கு நரியின் தந்திரம் புரியத் தொடங்கியது. இருத்தும் நரியின் புகழாரம் சற்று மயக்கத்தை கொடுத்தது. உடனடியாக தனது வடை மீது அதன் கவனம் பரவத் தொடங்கியது.

நேற்றைய துன்பம் இன்றைய புகழ் மயக்கத்தை வென்றது. உடனடியாக தன்னை புகழ்ந்த நரிக்காக பாடவும் முடிவெடுத்து வடையை காலின் உதவியோடு இடுக்கிப் பிடித்தபடி 'கா...கா...கா... நான் காக்கா தான்' என ராகத்தோடு கரைந்தது.

தனது தந்திரத்தை காகம் புரிந்து கொண்டு விட்டதே என்ற வெட்கம் ஒருபுறம், தோல்வியால் ஏற்பட்ட கோபம் ஒரு புறம் துன்புறுத்த அவ்விடத்தை விட்டு ஓடியே போனது. காகமும் தனக்குள் சிரித்துக் கொண்டு வடையை கவ்விக் கொண்டு தன் இருப்பிடம் பறந்தது.
சிறுவர் நீதிக்கதைகள் - பாட்டி வடை சுட்ட கதை சிறுவர் நீதிக்கதைகள் - பாட்டி வடை சுட்ட கதை Reviewed by Dinu DK on August 05, 2012 Rating: 5

No comments:

Powered by Blogger.