Kamarajar History in Tamil | காமராஜர் வாழ்க்கை வரலாறு


Kamarajar History in Tamil

காமராஜர் வாழ்க்கை வரலாறு:

உலகப் படிப்பை படிக்கவேண்டும் என்பதற்காகாத்தான் தன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினாரோ என்னவோ? காமராஜர் படித்தது வெறும் ஆறாம் வகுப்புதான். ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதல் அமைச்சர் பதவியேற்ற அவர் தான் தலை சிறந்த தலைமைத்துவத்தை 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு வழங்கினார். காமராஜர் பட்டபடிப்பு படிக்காதவராக இருந்தாலும் அவரைச்சுற்றி எப்போதும் படித்த மேதைகள் இருப்பார்கள்.

அவர் முதல் அமைச்சர் ஆன உடன் நாட்டு மக்களின் கல்வியில்தான் முதல் அக்கறை செலுத்தினார். உணவின்மையால் மாணவர்களின் கல்வி கெட்டுப்போகக்கூடாது என்பதற்காக பள்ளிகளில் இலவச உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்தார். "நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, வரும் தலைமுறையாவது பெற்று, வளர்ந்து வாழட்டும். அன்னதானம் நமக்கு புதியது அல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம்.

இப்போது, பள்ளிக் கூடத்தை தேடிப்போய் போடச்சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும்... என் மனதில், எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட முக்கியமான வேலை இப்பொதைக்கு இல்லை. நான் இதையே எல்லாவற்றிலும் முக்கியமானதாகக் கருதுகிறேன். எனவே மற்ற வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஊர் ஊராக வந்து, பகல் உணவுத் திட்டத்திற்க்குப் பிச்சையெடுக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று பேசியவர் பெருந்தலைவர்.

எழுத்தறிவு இன்மையை போக்க 11 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தினார். அனைத்துப் பள்ளி குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்கினார் . அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டார் . அவர் முதலமைச்சர் ஆனவுடன் அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களையே அமைச்சர் ஆக்கினார். தான் முதல் அமைச்சராக இருந்த போது வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்பு சலுகைகள் தராதவர் . அவரது காலகட்டத்தில்தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை தமிழ் நாடு பெற்றது .

மூத்த தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்ககூடாது,பதவி விலகி கட்சி நலனுக்காக செயல்ப்பட வேண்டும் என்று கூறியதோடு நிற்காமல் தானும் பதவி விலகி முன் உதாரணமாக இருந்தார்.

இரண்டு முறை பிரதமராகும் வாய்ப்பிருந்தும், லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்கிய கிங்மேக்கர் அவர். சினிமா என்றால் காமராஜருக்கு எட்டிக்காய். சினிமாவில் நாம் பார்த்து ஆச்சரியப்படும் ஹீரோக்களைப் போல அல்லாமல் ரியல் ஹீரோவாக வாழ்ந்தவர் அவர்.

அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்தான். என்றைக்கும் தான் ஏழைப்பங்காளன்தான் என்பதை வாழ்நாளில் நிரூபித்துவிட்டு சென்ற உத்தமர் அவர்.

பிறப்பு:

காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜீலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குக் குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.

தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

சிறை வாழ்க்கையும் படிப்பும்

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும்போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார்.

ராசாசியின் தலைமையில் 1930 மார்ச்சு மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடுவின் வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை ஆனார்.

1940 இல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாகப் பெற்றார்.

அரசியல் குரு

satyamurti - சத்தியமூர்த்தி
காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டுக் காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார்.


எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் !

‘‘அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போது அது மக்களுக்குக் கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது. ஆகவே, வீண் சண்டைகளை, சர்ச்சைகளை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்’’ என்றார் காமராஜர். ஆனால், எந்த அரசியல்வாதிகள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் அவர். 

1953-54-ம் ஆண்டில் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நேரத்தில் முதல்வர் பதவிக்கு சி.சுப்பிரமணியமும் போட்டியிட்டார். முதல்வர் பதவிக்கு சுப்பிரமணியம் பெயரை பக்தவத்சலமே முன்மொழிந்தார். தேர்தலில் காமராஜர் வெற்றிபெற்றார். இதனால் சுப்பிரமணியமும், பக்தவத்சலமும் திகைத்துப்போனார்கள். 

தனது செயலுக்காக காமராஜரிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார் பக்தவத்சலம். இந்த நிலையில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பிரமணியத்தையும், அவரை ஆதரித்த பக்தவத்சலத்தையும் மந்திரி சபையில் சேர்த்துக்கொண்டார். இதுபற்றி சிலர் காமராஜரிடம் கேட்டபோது, ‘‘என்னை எதிர்த்தவர்கள் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஏற்கெனவே மந்திரிகளாய் பதவி வகித்து அனுபவம் பெற்றிருக்கும் அவர்கள் சேவை, நாட்டுக்குப் பயன்பட வேண்டாமா’’ என்று பதிலளித்தார்.

அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு !

காமராஜர் பயின்ற பள்ளியில் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தைக் கைநிறையப் பெற்றுக்கொள்வார்கள். பிரசாதத்துக்காக அந்த மாதிரி முண்டியடித்துக்கொண்டு செல்வது காமராஜருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார். 

கடைசியாக மிச்சமிருந்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். ‘‘எல்லோரும் நிறைய பிரசாதம் வாங்கிக்கொண்டு செல்லும்போது, நீ மட்டும் குறைவாக வாங்கிவந்தது ஏன்’’ என வீட்டில் உள்ளவர்கள் கேட்டனர். ‘‘மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க எனக்கு விருப்பமில்லை.

பள்ளியில் எல்லா மாணவர்களிடமும் ஐந்து காசு வசூலித்தவர்கள், ஒரே மாதிரியாகப் பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு’’ என்றார் காமராஜர். அரசியல் தவிர அனைத்து சிக்கலான பிரச்னைகளையும் எளிதாகச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர் காமராஜர்.

கல்விக்கண் கொடுத்தவர்:
ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.

“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.

“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?

உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.

“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.

“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.

“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.

உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 - ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.


அணைக்கட்டுகள்:

காமராஜர் ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன். இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவானது.

sathanur dam


மதுரையில் உள்ள வைகை அணையும் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர்நிலம் பாசன வசதி பெற்றது.

சுமார் 3 கோடி செலவில் அமராவத அணை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 47,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.

நெல்லை மாவட்டம் தாரிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெற்றது.

1,100 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வாலையார் அணை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டது.

இரண்டு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி அணையும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.

சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.

சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவில் புள்ளம்பாடி திட்டம் உருவாக்கப்பட்டதால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.

சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தென்னாற்காடு மாவட்டம் கோமுகி ஆற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.

இவை தவிர கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையும் கர்மவீர்ர் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொழில் நிறுவனங்கள்:

காமாரஜர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேணன் ஆகியவை காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.

இவை தவிர சிமென்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், அலுமினிய உற்பத்தி ஆலைகள், மாக்னசைட், சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், உலைக்கூட ஆலைகள், ரப்பர் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன.

மேலும் பாதைகள் அமைக்கும் எஞ்சின்கள்,சைக்கிள்கள், தானியங்கி ஈரிருளிகள், தட்டச்சுப் பொறிகள், ஸ்விட்ச் கியர்கள், எலக்ட்ரிக் கேபிள்கள், மருத்துவ அறுவைச் சிகிச்சை கருவிகள், தொடர் வண்டிப் பெட்டிகள், பார உந்து வாகனங்கள் ஆகியன காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும்.

இவைதவிர எண்ணூர் அனல் மின்சார நிலையம், தூத்துக்குடி துறைமுகம் போன்ற மிகப்பெரிய தொழில் திட்டங்களும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.


இறுதிக் காலம்

காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். 

இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர் துறந்தார்.

1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.



Kamarajar History in Tamil | காமராஜர் வாழ்க்கை வரலாறு Kamarajar History in Tamil | காமராஜர் வாழ்க்கை வரலாறு Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.