சுண்டெலியின் பயம்

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் அருகே ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலையினருகே உள்ள ஒரு துவாரத்தில் சின்ன சுண்டெலி ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது. அந்தக் காட்டில் பூனையின் நடமாட்டம் அதிகம் இருந்தது. ஆகவே, அது மிகவும் பயத்துடன் வாழ்ந்து வந்தது.

ஒருநாள் ஒரு பூனையின் பிடியிலிருந்து தப்பிய சுண்டெலி, ஆஸ்ரமத்தில் உள்ள முனிவரைச் சரண் அடைந்தது. முனிவர் அதை அன்புடன் கவனித்தார்.

"பயப்படாதே!'' என்று ஆறுதல் கூறினார்.

"நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.

"சுவாமி நான் பூனைகளைக் கண்டு அதிகமாகப் பயப்படுகிறேன். என்னையும் ஒரு பூனையாக மாற்றி விட்டால், நான் பயப்படவேண்டிய அவசியம் இல்லை அல்லவா?'' என்றது சுண்டெலி.

முனிவர் சிற்றெலியைப் பெரும் பூனையாக மாற்றினார்.

ஒரு மாதம் சென்றது. பூனை அவர் முன் வந்து நின்றது.

"சுவாமி, பூனையாக இருப்பதிலும் பிரச்னை. ஓநாய்கள் என்னை விரட்டுகின்றன'' என்றது.

பூனையின் எண்ணத்தை அறிந்து கொண்ட முனிவர் அதை ஓநாயாக மாற்றினார். ஓநாய் சந்தோஷமாகத் திரும்பிச் சென்றது. ஒருமாதம் சென்றவுடன், மீண்டும் ஓநாய் திரும்பி வந்து முனிவரைச் சரண் அடைந்தது.

"என்ன விஷயம்?'' என்றார் முனிவர்.

"கரடிகள் தொல்லை தருகின்றன!'" என்றது ஓநாய்.

அதைக் கரடியாக மாற்றி அனுப்பி வைத்தார் முனிவர்.

மீண்டும் ஒரே மாதத்தில் திரும்பியது கரடி.

"இப்போதும் பிரச்னையா?'" என்று புன் சிரிப்புடன் கேட்டார் முனிவர்.

"ஆம் சிறுத்தைகள் என்னைக் கடிக்க வருகின்றன'' என்றது.

"ஓஹோ!'' என்ற முனிவர் அதை ஒரு சிறுத்தையாக உருமாற்றினார்.

ஒருமாதம் சென்றவுடன் சிறுத்தை திரும்பி வந்தது.

"சிங்கங்கள் என்னைக் காட்டை விட்டு வெளியேறு என்று உத்தரவிடுகின்றன'' என்றது.

"காரணம்?'' என்ன என்று முனிவர் கேட்டார்.

"பலசாலிகள் ஒரே காட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் அதன் எண்ணம்'' என்றது.

முனிவர் அதைச் சிங்கமாக மாற்றினார்.

சிங்கம் ஒரு மாதம் சென்ற பிறகு, "சுவாமி, நகரத்திலிருந்து வந்த அரசன் ஒருவன், சிங்க வேட்டை ஆடினான். தப்பிப் பிழைத்தது நான் மட்டும்தான்!'' என்றது.

முனிவர் சிங்கத்தை அரசனாக்கினார். அதன்பின் இரண்டு மூன்று மாதங்கள் வரை அரசன் முனிவரைப் பார்க்கவில்லை. ஆறு மாதத்துக்குப் பின் அரசன், கிழிந்த துணிமணிகளுடன் வந்து முனிவரைப் பார்த்தான்.

"என்ன ஆயிற்று உனக்கு?'' என்றார் முனிவர்.

"எதிரி நாட்டு அரசன் போர் தொடுத்தான். எனக்குப்போர் செய்யவே பயமாக இருந்தது. இருப்பினும் என் சார்பாக எல்லாரும் போர் புரிந்தனர். கடைசியில் எதிரிகள் அரண்மனைக்குள் புகுந்து என்னைக் கைது செய்தனர். பாதாளச் சிறையில் அடைத்தனர். நான் தப்பி வந்து விட்டேன்'' என்றான்.

"இப்போது நான் என்ன செய்ய வேண்டும், உனக்காக எதிரியுடன் போராட வேண்டுமா?'' என்றார் முனிவர்.

அந்த அரசன் அமைதியாக இருந்தான்.

முனிவர் சொன்னார். "சிற்றெலியாக இருந்த உன்னை அரசர் வரை உயர்த்தினேன்". ஆனாலும் உன்னுள் இருந்த எலித் தன்மை மாறவில்லை. பயத்துடனே இருந்தாய்.

"இனி, நான் உனக்கு உதவுவதற்காக எது செய்தாலும், அது உனக்கு உதவவே உதவாது. இதுவரை எலியின் மனதையே பெற்றிருக்கும் நீ, இனியும் எலியாக இருப்பதே நல்லது'' என்று கூறி அரசனை எலியாக மாற்றினார் முனிவர்.
சுண்டெலியின் பயம் சுண்டெலியின் பயம் Reviewed by Dinu DK on 2/22/2013 Rating: 5

3 comments:

Powered by Blogger.