Announcement:

TamilsiruKathaigal facebook fan page has reached over 3500+ fans.

Latest Updates

View More Stories

30 July 2014

தெனாலிராமனும் ஜோசியரின் வார்த்தையும் | Tenali Raman & Astrologer's Words Story

தெனாலிராமனும் ஜோசியரின் வார்த்தையும் கதை. Read and download Tenali Raman & Astrologer's Words Story in tamil with pictures for kids online.

தெனாலிராமனும் ஜோசியரின் வார்த்தையும்

(Tenali Raman & Astrologer's Words Story) 


கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.

கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.

தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

Tenali Raman and Astrologer

இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர். தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.

ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.

அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.

நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!27 July 2014

Kargil War History in Tamil | கார்கில் போர் வரலாறு

Kargil War History in Tamil:

Read and download the history of Kargil War (கார்கில் போர் வரலாறு) documentary story in Tamil (தமிழ்) language with pictures.

Kargil War - Solders with Indian Flag in Tiger Hill

கார்கில் போர் வரலாறு:

இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பனி படரும் மிக உயர்ந்த இமயமலை பிரதேசம். பாரத மாதாவின் மணி மகுடத்தில் அழகுக்கு அழகு சேர்க்கும் அழகிய நகரம். திரும்பும் திசையெல்லாம் உயர்ந்து நிற்கும் மலை முகடுகள்.. அதை சுற்றி போர்த்தப்பட்டிருக்கும் பனித் திரைகள்.

பார்க்க பார்க்க பரவசப்படுத்தும் இந்த நகரம் ஸ்ரீநகரில் இருந்து 205 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மட்டும்தான் கார்கில் வழியாக செல்கிறது. கரடு முரடான மலை பிரதேசத்தில் இது ஒன்றுதான் போக்கு வரத்துக்கான ஒரே வழி.

Kargil War - Indian Solders Firing Against Pakistan's Camp
தரை பகுதியில் இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இந்த கோட்டின் இருபகுதியிலும் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன.

இரு நாட்டு ராணுவமும் அந்த பகுதியில் முகாமிட்டு இரவு பகலாக எல்லையை கண்காணித்து வருகின்றன. துப்பாக்கி குண்டுகளுக்கு கூட அஞ்சாத ராணுவ வீரர்களை குளிர்காலத்தில் பனிக் கீற்றுகள் துளைத்து நடுங்க வைத்து விடும். வெப்பம் (-48) டிகிரிக்கு மாறி விடும். குளிரில் பனிக்கட்டிகள் அந்த பகுதியையே சூழ்ந்து விடும்.

எனவே அந்த குளிர்காலத்தில் இரு நாட்டு ராணுவத்தினரும் தங்கள் பாசறைகளை அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்கள்.

குளிர்காலம் முடிந்ததும் மீண்டும் ராணுவம் தங்கள் நிலைகளுக்கு திரும்பும். அதை தொடர்ந்து ராணுவத்தின் ரோந்தும் தீவிரமாகும். இதுதான் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் வழக்கம்.

காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடும் பாகிஸ்தானுக்கு எவ்வளவு பட்டாலும் புத்திவராது. கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலையை துண்டித்து விட்டால் அங்கிருந்து இந்தியாவை எளிதில் தாக்கலாம். இதன் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று பாகிஸ்தான் கனவு கண்டது.

இந்த ஊடுருவல் முயற்சிக்கு பல முறை திட்டம் வகுத்தார்கள். ஆனால் ஜியா உல் ஹக், பெனாசிர் பூட்டோ ஆகியோர் அதிபர்களாக இருந்தபோது அந்த திட்டத்தை நிராகரித்து விட்டனர்.

ஏற்கனவே 1971–ல் நடந்த போரில் பட்ட சூடும், அவ்வப்போது இந்திய ராணுவத்தின் அதிர வைக்கும் பதிலடிகளும் போரை நினைத்தாலே அவர்களை அஞ்சி நடுங்க செய்தது.

ஆனால் 1990–களில் பாகிஸ்தான் தூண்டுதலோடு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிராத தாக்குதல்கள் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவுக்கு வேட்டு வைத்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் உருவானது.

Atal Bihari Vajpayee (அடல் பிஹாரி வாஜ்பாய்)
இந்த பதட்டத்தை தவிர்க்கவும் காஷ்மீர் பிரச்சினையை அமைதியாக தீர்த்து கொள்ளும் வகையிலும் 1999 பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு பஸ் பயணத்தை தொடங்கி வைத்து லாகூருக்கு பஸ்சில் சென்று வந்தார். இந்தியா அன்புடன் நேசக்கரம் நீட்டியது. ஆனால் பாகிஸ்தான் வம்பு செய்தது.

ஒரு புறம் நட்பு பாராட்டி கொண்டே திரைமறைவில் ஊடுருவல் வேலைகளை கச்சிதமாக செய்து கொண்டிருந்தது. 1999–ம் ஆண்டு குளிர்காலத்தில் படைகள் கீழே இறங்குவதற்கு பதில் அங்கேயே முகாமிட்டு இருந்தன. ராணுவ தளவாடங்களை கொண்டு வந்து குவித்தனர். படைகள் கீழே இறங்கி விட்டதால் காலியாக இருந்த இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது. கார்கிலில் ஊடுருவி எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர்.

kargil war location map
130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஊடுருவி விட்டனர். முஷ்கோ பள்ளத்தாக்கு, டிராஸ் அருகில் உள்ள மார்போலா மலை முகடுகள், கார்கிலுக்கு அருகில் உள்ள கக்சர், சிந்து நதியின் கிழக்கு பகுதியில் உள்ள படாலிக் பகுதி, எல்லையோரத்தில் உள்ள சோர்பாட்லா பகுதி, சியாசின் பனி மலைக்கு தெற்கே அமைந்துள்ள துர்தோக் ஆகிய பகுதிகளை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்தி விட்டன.

இந்திய ராணுவ நிலைகளை கைப்பற்றியதோடு புதிதாக ராணுவ தளங்களையும் அமைத்து விட்டனர்.

வல்லவர்களாக இருந்தாலும் நம்மவர்கள் கோட்டை விடுவதிலும் கெட்டிக்காரர்களல்லவா? கார்கில் விசயத்திலும் அப்படித்தான்! பாகிஸ்தான் ஊடுருவலை கண்டு பிடிப்பதில் கோட்டை விட்டு விட்டனர்.

மாடு மேய்ப்பவர்கள்தான் முதலில் இந்த ஊடுருவலை இந்திய ராணுவத்தின் பார்வைக்கு கொண்டு வந்தனர். மலை முகடுகளில் மாடு மேய்க்க சென்றவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மாடு மேய்ப்பவர்கள் சொல்லிய தகவலை கேட்டதும் உஷார் அடைந்த ராணுவத்தினர் கேப்டன் சவுரப் காலியா என்பவரது தலைமையில் படாலிக் பகுதிக்கு ரோந்து சென்றனர். அவர்களில் 5 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர். அப்போதும் இது தீவிரவாதிகள் செயலாகத்தான் இருக்கும் என்று தான் நமது ராணுவம் நினைத்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் அங்கிருந்து கார்கில் ராணுவ கிடங்கை குறி வைத்து குண்டு வீசப்பட்டதில் ராணுவ கிடங்கு சேதமடைந்தது. அதன் பிறகுதான் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருக்கிறது என்பதை உறுதி செய்தனர்.

முதுகில் குத்திய பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட பிரதமர் வாஜ்பாய் போர் பிரகடனப்படுத்தினார்.

தாய் மண்ணை காக்க கார்கில் போருக்கு நமது வீரர்கள் தயாரானார்கள்.

pokhran nuclear test site
ஒரு ஆண்டுக்கு முன்புதான் (1998–ல்) 2–வது முறையாக பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலகிற்கே சவால் விடுத்த நமக்கே பாகிஸ்தான் சவால் விடுவதா? என்ற ஆவேசம்....

தரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது. 2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

ஆனால் கார்கில் கரடு முரடான மலை பகுதி! போக்கு வரத்துக்கு ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலை மட்டும்தான் உண்டு. ஒரே வழியில் லட்சக்கணக்கில் வீரர்கள் செல்வது... ஆயுதங்கள் கொண்டு செல்வது.... பீரங்கிகள் அணிவகுப்பது... அவ்வளவு எளிதானதல்ல.

தாய் நாட்டை காக்க உயிரை துச்சமென மதித்து இளம் இந்திய சிங்க குட்டிகள் மலை முகடுகளில் துள்ளி குதித்தன. மிக உயர்ந்த மலை சிகரத்தில் கடுமையான சவால்களை சந்தித்து நமது ராணுவ வீரர்கள் நடந்து முன்னேறினார்கள்.

முதலில் ஸ்ரீநகர் – லடாக் தேசிய நெடுஞ்சாலையை மீட்க போராடினார்கள். இந்த போராட்டம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மலை முகடுகளின் உச்சியில் இருந்து பாகிஸ்தான் பொழிந்த குண்டு மழையையும், துப்பாக்கி குண்டுகளையும் கீழே இருந்து சந்தித்து அங்குலம் அங்குலமாக நகர்ந்தார்கள்.

kargil war landmineசாலை முழுவதும் குண்டு வீச்சில் சேதம் அடைந்து கிடந்தது. வழி நெடுக கண்ணி வெடிகளும் மிரட்டியது. அவற்றை ராணுவத்தினர் அப்புறப்படுத்தினார்கள். 9 ஆயிரம் கண்ணி வெடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டது.

சிறு சிறு குழுக்களாக வெறும் 30 ஆயிரம் வீரர்கள் மட்டுமே போர்க்களத்தில் இருந்தார்கள். படை சிறிதாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சுரம் அதிகமாக இருந்தது.

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடந்தால் பாகிஸ்தான் படைகளை பல முனைகளில் புகுந்து தாக்கி துவம்சம் செய்து இருப்பார்கள். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடக்க கூடாது என்ற கட்டுப்பாடு ராணுவத்துக்கு விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் நேருக்கு நேராக தாக்கி அவர்களை ஓட வைப்பது மட்டும்தான் சாத்தியமாக இருந்தது.

பகல் நேரத்தில் ராணுவம் நகர்ந்ததால் மலை உச்சியில் இருந்து கவனித்து குண்டுகளை வீசினார்கள்.

இதனால் இரவு நேரத்தையே தாக்குதலுக்கு தேர்வு செய்தார்கள். அடர்ந்த காடு... முகம் தெரியாத கும்மிருட்டு... கண்களில் தெறித்த கோபக் கனலில் ராத்திரி நேரத்தில் வேட்டையாடினார்கள். எதிரிகள் பலரை எமலோகத்துக்கு அனுப்பினார்கள்.

பாகிஸ்தான் வசம் இருந்த ஒவ்வொரு சிகரத்தையும் நமது ராணுவத்தினர் மிகப்பெரிய போராட்டத்துக்கு இடையே கைப்பற்றினார்கள். மலை உச்சியில் இருந்து தாக்கிய பாகிஸ்தான் ராணுவத்தினரை மலை பாறைகளுக்கு இடையே ஊர்ந்தபடி சென்று வீழ்த்தினார்கள்.

முன்னேறிய ராணுவத்துக்கு வலுசேர்க்க விமானப் படை விமானங்களும் குண்டுகளை வீசியது. ஆனால் உயர்ந்த மலை முகடுகளுக்கிடையே பனி மூட்டத்தில் விமானங்களை செலுத்துவது கடினமாக இருந்தது.

Indian MiG-27 Jet Dropped Bombs in Kargil Warஇந்த போரில் இந்தியா 3 விமானங்களை இழந்தது. மிக் 27 மிக்–21 ஆகிய இரு விமானங்களை இந்தியா இழந்தது. விமானப்படை லெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் சிறை பிடித்தது. எம்.ஐ.17 என்ற விமானத்தையும் சுட்டு வீழ்த்தினார்கள். இதில் விமானத்தில் இருந்த 4 வீரர்கள் பலியானார்கள்.

Infantry Combat Tanks in Kargil Warபோர் உக்கிரமானதே தவிர முடிவுக்கு வரவில்லை. தரைப்படைக்கு ஆதரவாக பீரங்கிப்படையும் மலை அடி வாரங்களில் இருந்து எதிரிகள் நிலைகள் மீது குண்டு மழை பொழிந்தது. முற்றிலும் மலை மீது நடந்த மாறுபட்ட போர். இளம் வீரர்களுக்கு புது அனுபவம். இதனால் வீரர்கள் பலர் இன்னுயிரை இழக்க நேரிட்டது. ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

நமது கடற்படையினர் போரின் போக்கை மாற்றினர். எதிரிகளை வீழ்த்த புது வியூகம் அமைத்தனர். கராச்சி துறைமுகத்துக்கு சரக்கு கப்பல்கள் செல்ல முடியாதபடி நடுக்கடலில் தடுத்து நிறுத்தியது நமது கடற்படை.

ஒரு புறம் பெருளாதார சிக்கல். இன்னொரு புறத்தில் போர். நிலைமையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. ராணுவத்துக்கு 6 நாட்களுக்குத்தான் எரிபொருள் இருந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் அலறியது.

42nd United States President Bill Clintonஅமெரிக்க அதிபர் பில்கிளிண்டனிடம் போரை நிறுத்த உதவும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப் கெஞ்சினார். இந்திய தரப்பு நியாயத்தை உணர்ந்த அமெரிக்கா உடனடியாக கார்கிலில் இருந்து படைகளை வாபஸ் பெறும்படி எச்சரித்தது.

இந்திய வீரர்களின் ஆவேச தாக்குதலில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ஒவ்வொன்றாக இழந்து வந்த பாகிஸ்தான் உலக நாடுகளின் எச்சரிக்கையால் படைகளை விலக்கி கொள்ள முன் வந்தது. இதற்கான அறிவிப்பை நவாஸ்ஷெரீப் வெளியிட்டார்.

Pervez Musharraf
இது அப்போது தளபதியாக இருந்த முஷரப்புக்கு பிடிக்கவில்லை. இதுவே பிற்காலத்தில் ராணுவ புரட்சி நடத்தி முஷரப் ஆட்சியை பிடிக்க வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் படைகள் 80 சதவீதம் வெளியேறிய பிறகும் ஊடுருவிய தீவிரவாத குழுக்கள் போரை தொடர்ந்தது. அவர்களை ஒரு வாரத்தில் அடித்து விரட்டி கார்கில் பகுதி முழுவதையும் நமது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

போர் முடிவுக்கு வந்ததாக ஜூலை 26–ந் தேதி இந்திய தேசம் உலகுக்கு அறிவித்தது.

இந்த போரில் இந்தியா 527 வீரர்களை தியாகம் செய்துள்ளது. 1863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக எங்கள் தரப்பில் 357 வீரர்களை தான் இழந்தோம் என்று போலி கணக்கு காட்டியது பாகிஸ்தான். ஆனால் 4 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி விட்டனர் என்ற உண்மையை பிற்காலத்தில் நவாஸ்ஷெரீப்பே ஒத்துக் கொண்டார்.

"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்!"

Download As PDF      

13 July 2014

குள்ள ராஜா போட்ட தடை | The Dwarf King and His Check

மங்களபுரம் என்ற ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரியும் இருந்தார். ராஜாவோட உயரம் நாலரை அடிதான். ஆனா அமைச்சரோ ஆறடி உயரம் இருந்தார். ராஜா குள்ளமா இருந்தாலும் அது பத்தி கவலையில்லாம இருந்தார். அவர் விருப்பத்திற்கேற்ப மந்திரி நடந்தார்.

ஒருமுறை ராஜாவும், மந்திரியும் மாறுவேஷத்துல நகர்வலம் போனார்கள். அப்போது ஒரு வீட்டில் ஒரு அப்பா, தன் பையனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

The Dwarf King and His Check

நல்லா குதிச்சு உயரமா ஆகற வழியை பாரு. இல்லேன்னா நம்ம ராஜா போல குள்ளமா ஆயிடுவே” என்று கூறினார். இதை கேட்டதும் ராஜாவுக்கு கடுங்கோபம் வந்தது. மாறுவேஷத்தை யாருக்கும் காட்டிக்கொடுக்கவும் விரும்பவில்லை. இருவரும் விடுவிடுவென்று அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள். அன்றைக்கு முழுவதும் ராஜா கோபமாகவே இருந்தார்.

மறுநாள் காலை ஊர் முழுக்க தண்டோரா போடச் சொன்னார் ராஜா. “இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நாலரை அடி உயரத்துக்கு மேல ஊருல ஆம்பிளைங்க யாரெல்லாம் இருக்காங்களோ, அவங்க எல்லோரும் உடனடியா ஊரை விட்டு வெளியேறணும்” என்று அறிவிப்பு வெளியிட்டார் ராஜா.

அதனால் ஊருல இருந்த எல்லா பெரியவங்களும் உடனடியா காலி பண்ணிட்டாங்க. மந்திரி ஆறடி உயரம் இருந்தாலும், மந்திரி மட்டும் காலி பண்ணாம இருந்தார். ஆனால், ராஜா பார்த்தால் திட்டுவாரேன்னு மறைந்து வாழ்ந்து வந்தார். எல்லா பெரியங்களும் வெளியே போய்ட்டதால சின்ன பசங்க சில பேரை ஒற்றர்களாகவும், அமைச்சர்களாகவும் ராஜா நியமிச்சார். ஆனா வீரர்களா இருக்க உயரமும் வேணுமே? அதனால வீரர்கள் மட்டும் கிடைக்கவே இல்ல.

இதெல்லாம் ராஜாவை எப்போ கவிழ்க்கலாம் என்று காத்துக் கொண்டிருந்த எதிரி நாட்டு ராஜாவுக்கு தெரிந்தது. அதனால மங்களபுரம் மேல போர் தொடுக்க போவதாக அறிவிப்பு தந்தார். அத்துடன், தனது வீரர்களோடு ஊரையும் முற்றுகையிட்டார்.

மங்களபுரத்தில் வீரர்கள் இல்லாததால் ராஜாவுக்கு ஒரே கவலை. இந்த நேரத்தில் ராஜாவின் முன்னால் மந்திரி அரண்மனைக்கு வந்தார். மந்திரியைப் பார்த்ததும் ராஜாவுக்கு சந்தோஷம். ஆனா, வெளியில அதை காட்டிக்காமல் கோபமாக பேசினார்.

இப்ப ஏன் இங்க வந்தே?” என்று கேட்டார். “மன்னரே, என் கால் ரெண்டையும் பாருங்க. நான் குள்ளமா இருக்கணும்கிறதால அப்படியே வெட்டிக்கொண்டேன்” என்றார் அமைச்சர்.

The Dwarf King and His Check 2

ராஜா அப்போதுதான் அமைச்சரின் காலைப் பார்த்தார். கால் குண்டா இருந்தது. ஆனால், கால் முழங்காலை மடிச்சு சின்னதா இருப்பது போல காண்பித்திருந்தார் அமைச்சர். ராஜாவுக்குப் புரிந்தது. அமைச்சரின் நகைச்சுவையை ரசித்தார். உடனே வேலையில் சேரும்படி அமைச்சருக்கு ராஜா உத்தரவிட்டார்.

உடனடியாகக் களத்தில் இறங்கிய அமைச்சர், மளமளவென்று உத்தரவுகளைப் பிறப்பித்தார். குள்ளமான சிறுவர்களை எதிரி நாட்டு ஒற்றர்களுக்கு சந்தேகம் வராமல் வெளியே செல்வதற்குப் பயிற்சியளித்தார். அவர்கள் மூலம் ஊரை காலி செய்து விட்டுப் போன வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். வீரர்கள் எல்லோரும் பின்புறமாக அரண்மனையில் குவிந்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்து எதிரி நாட்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதை தாங்க முடியமால் எதிரி நாட்டுப் படையினர் ஓட்டம் பிடித்தார்கள்.

நாட்டை ஆபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக மந்திரிக்கு ராஜா நன்றி தெரிவித்தார். நாட்டை ஆள்வதற்குத் தேவை வீரமும், அறிவும்தான். அதை ஒழுங்காகச் செய்வதுதான் முக்கியம் என்பதை ராஜா உணர்ந்து கொண்டார். உடனே உயரமானவர்களுக்கு விதித்த தடையை நீக்கினார். எல்லோரும் ராஜாவை வாழ்த்தினார்கள்.


கதை ஆசிரியர்: சந்திர பிரவீன்குமார்

நன்றி: தி இந்து (18/06/2014)

Story & Image Credit: Tamil. TheHindu. com


பூமிக்கு வந்த சூரியப் பந்து | Sun Visits Planet Earth Story

எப்போதுமே வானத்திலேயே இருக்கிறோமே, கொஞ்சம் பூமிக்குத்தான் போய் பார்ப்போமே’ என வானத்தில் தெரியும் சூரியனுக்கு ஒரே ஆசை. உடனே பூமிக்கு இறங்க ஆரம்பித்தது. மலைகளின் முகட்டில் இறங்கிய சூரியனுக்கு ஒரு யோசனை வந்துச்சு. தன்னுடைய சூட்டை பூமி தாங்குமான்னு யோசித்துக் கொண்டே இருந்தது. அருகில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் இறங்கி சூட்டை குறைக்கப் பார்த்தது சூரியன்.

சூரியனின் வெப்பம் அவ்வளவு சீக்கிரமா குறைஞ்சிடுமா என்ன? இருந்தாலும் கொஞ்ச நேரம் தண்ணியிலேயே சுத்தி சுத்தி வந்ததால, சூடு கொஞ்சம் குறைஞ்சு காணப்பட்டது.

தண்ணியில இருந்து வெளியே வந்த சூரியன், காட்டை சுத்தி சுத்திப் பார்த்தது. நெடு நெடுவென வளர்ந்த உயரமான மரங்கள், குண்டு குண்டான மரங்கள், அவற்றில் கொத்துகொத்தாக பழங்களையும், பூக்களையும் கண்டு சந்தோஷப்பட்டுச்சு.

மரங்கள் ரொம்ப அதிகமாக இருந்ததால அந்த இடம் இருட்டா இருந்துச்சு. சூரியன் உள்ளே நுழைந்ததும் நூறு அகல் விளக்குகளை ஏத்தி வச்சது மாதிரி வெளிச்சமானது அந்தக் காடு.

திடீரென ஏதோ வெளிச்சம் வருகிறதே என தூரத்தில் பார்த்த இரு யானைகள், வெளிச்சம் வந்த இடத்தைப் பார்க்க வேகமாக வந்துச்சுங்க. தூரத்தில் இருந்து பார்த்தப்ப, சூரியன் வட்டமாக தெரிஞ்சது.

Sun and Elephant - Sun Visits Planet Earth Story

“அட! அதோ பாரேன் ஒரு பந்து” என்றது மகி யானை.

“ச்சே..ச்சே... கால்பந்தா இருந்தா ஒளிராதே” என்றது வாண்டு யானை.

“எது எப்படியோ, நமக்கு விளையாட ஒரு கால்பந்து கிடைச்சிருச்சி. வா சீக்கிரமா போய் பந்தை எடுத்து விளையாடலாம்” என்றழைத்தது மகி யானை.

“ஏய், நல்லா பாரு. அது பந்தா! பந்துன்னா இவ்வளவு வெளிச்சமா ஒளிராதே. இது பந்தா இருக்காது” என்றது வாண்டு யானை.

“சரி... வா, கிட்ட போய் பார்ப்போம்” என்றது மகி யானை.

சூரியனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“என்ன! இந்த யானைகள் என்னை பந்துன்னு நினைச்சிடுச்சிங்களா. பூமிக்கு வந்துட்டதால என்னை அடையாளம் தெரியாமப் போச்சா?” என மனசுக்குள்ள சொல்லிக்கிச்சு.

அருகில் வந்த யானைங்க சூரியப் பந்தை அதிசயமாக பார்த்துச்சுங்க.

“வாண்டு! நீ சொன்னது போல் இது பந்தில்லைன்னு நினைக்கிறேன்” என்றது மகி.

“ஆமாம் மகி! அப்படின்னா இது என்னது? இவ்வளவு வெளிச்சமா இருக்கே. கிட்ட போனா ரொம்ப சுடுதே” என்றது வாண்டு.

“சரி. பேசிக்கிட்டே இருந்தா எப்படி. நாம் விளையாடப் பந்து கிடைச்சிருச்சு. வா விளையாடலாம்” என மீண்டும் அழைத்தது மகி.

“சரி. நீ இங்கே நில். நான் அந்த மரத்துக்கு பக்கத்துல நிக்கிறேன். நீ பந்தை உதைத்து என்கிட்ட அனுப்பு. நான் அதைத் தடுத்து மீண்டும் உன்கிட்ட அனுப்புறேன். இப்படியே நாம விளையாடுவோம்” என்றது வாண்டு.

‘அய்யய்யோ... யானைகள் கால்களில் நான் சிக்கப் போறேன்னா?’ என நினைக்கும் போதே சூரியனுக்கே வியர்க்க ஆரம்பிச்சுடுச்சி.

“ரெடி! ஒன்... டூ... த்ரீ...”ன்னு ஆரம்பித்த மகி, சூரியப் பந்தை ஓங்கி உதைத்தது.

வாண்டை நோக்கி பறந்த சூரியனை தனது துதிக்கையால் பிடித்தது. சூட்டை தாங்க முடியாம பந்தை உடனே கீழேப் போட்டது.

“ஐயோ! பந்து ரொம்பச் சுடுதே... அடுப்பிலிருந்து யாராவது இந்தப் பந்தை தூக்கி போட்டாங்களா?” என்றது வாண்டு.

“ஆமா! இவரு விளையாடறதுக்கு சுடச்சுட பந்தை சுட்டுத் தந்திருக்காங்க பாரு” என கேலி செய்தது மகி.

இருவரின் உரையாடலுக்கு இடையே ‘வேறு இடம் செல்லலாம்’ என நினைத்த சூரியன் சற்றே உருண்டது.

“ஏய் வாண்டு!, காத்துல அந்தப் பந்து உருளுது பாரு. அதை என்கிட்ட உதைச்சி அனுப்பு” என்றது மகி.

....சர்க் ஓங்கி ஒரே உதை.

இப்போது மீண்டும் மகியின் உதை.

நாலைந்து உதைகளிலேயே சூரியனுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.

‘அய்யய்யோ! தெரியாமல் பூமிக்கு வந்துட்டோமே’ன்னு எண்ணியவாறு, ‘எப்படி இவர்களிடம் இருந்து

தப்புவது’ என யோசித்தது சூரியன்.

அந்த நேரத்தில் வாண்டு அடித்த சூரியப் பந்தை மகி

தவறவிட்டது.

“நீ தோத்துட்ட. நீ தோத்துட்டன்னு” கூறி மகிழ்ச்சியில் வலம் இடதுமாக உடலை ஆட்டியது வாண்டு.

சற்றே கோபமா மகி,

“இப்ப பிடி பார்க்கலாம்” எனக் கூறி, ஒரு சிறிய பாறை மீது வைத்து குறிபார்த்து சூரியப் பந்தை ஓங்கி காலால் ஒரு உதை விட்டது.

இதுதான் சமயம் என தனது முழு பலத்தையும் சேர்த்து வானத்தை நோக்கி பறந்தது சூரியன்.

வானத்திற்கு வந்த பிறகுதான் அது பழைய நிலைக்கு வந்துச்சு.

‘இனி என்ன ஆனாலும் சரி, பூமியைச் சுற்றிப் பார்க்க போகவேகூடாது’ என மனதிற்குள் சபதம் எடுத்தது சூரியன்.

தாங்கள் அடித்த பந்து எங்கே விழுந்துச்சின்னு தேடிக் கொண்டிருந்தன யானைகள்.

குழந்தைகளே! உங்களுக்கு தெரிஞ்சா அதை யானைகளிடம் சொல்லுங்க.
  

கதை ஆசிரியர்: கன்னிக்கோவில் இராஜா

நன்றி: தி இந்து (09/07/2014)

Story & Image Credit: The Hindu


5 June 2014

பறக்க ஆசைப்பட்ட செடியன்! | The Boy Who Wanted to Fly

ஒரு கிராமத்துல செடியன்னு ஒரு பையன் இருந்தான். அவன் செடி உயரம்தான் வளர்ந்திருந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர். செடியனுக்கு பறவைகள் போல பறக்க ஆசை.

‘ஆனா நாம மற்றவர்கள் மாதிரி சராசரி உயரம் இல்லையே. நம்மால பறக்க முடியுமான்னு’ ஒரு சந்தேகம்.

சிட்டுக் குருவிக்கிட்ட தன்னோட சந்தேகத்தை கேட்டான் செடியன்.

“செடியா! நான் உன்னைவிட உருவத்தில் ரொம்பச் சிறியவன். ஆனால், என்னாலயே பறக்க முடியும்போது, உன்னால பறக்க முடியாதா என்ன?” எனத் தன்னம்பிக்கையை செடியன் மனசுல வளர்த்துச்சு.

“ஆமாம். ஆமாம். என்னால பறக்க முடியும்” என்று சொல்லிக் கொண்டே ஆற்றுப் பக்கம் வந்தான் செடியன். அங்கு நாரைகள் மீன்களைப் பிடிச்சு சாப்பிட்டுக் கொண்டே இருந்தன.

செடியன் ஒரு நாரையின் அருகே சென்றான் “பறவையே எனக்கு ஒரு உதவி செய்வாயா?” எனக் கேட்டான்.

“என்ன உதவி?” எனக் கேட்டது நாரை.

“உன்னோட இறக்கையில இருந்து ஒரே ஒரு இறகைத் தரியா. நான் பறக்கணும்னு” கேட்டான்.

அந்த நாரையும் ஒரு இறகைத் தந்தது.

மகிழ்ச்சியோடு வாங்கி தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். இதுபோல பல நாரைகளிடம் இருந்து ஒவ்வொரு இறகாக வாங்கி சேகரித்துக் கொண்டான்.

அங்கிருந்து மகிழ்ச்சியோட கிளம்பி, கோயில் அருகே வந்தான். அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு பாட்டியிடம் பேசினான்.

“பாட்டி.. பாட்டி.. இந்த இறகுகளை பறவை இறகுகள் மாதிரி கட்டிக் கொண்டு பறக்கப் போகிறேன். எனக்கு இறகுகளை கட்டிக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டான் செடியன்.

“நான் கட்டிக் கொடுத்தால் எனக்கு நீ என்ன தருவ?” என்று கேட்டார் பாட்டி.

“நான் பறந்து போய் மலைக்கு அந்தப் பக்கம் இருக்கிற பூக்களைப் பறித்து வந்து கொடுக்கிறேன்னு” சொன்னான் செடியன்.

பாட்டியும் இறகுகளை வைத்து கட்டிக் கொடுத்தார். அதை உடம்பில் கட்டிக்கொண்டு மலை உச்சிக்குப் போனான். அங்கிருந்து பறக்க முயற்சி செய்தான்.

ஆனால் செடியனால் பறக்க முடியலை.

பறவை இறகுகளைக் கட்டினால் மட்டும் நம்மால் பறந்துவிட முடியுமா என்ன? எவ்வளவோ முயற்சி செய்தான். அவனால் பறக்க முடியவில்லை. தோல்வி அடைந்த அவன் கோபத்தில் உடம்பில் கட்டியிருந்த இறகுகளைக் கழற்றி வீசினான்.

அது மலையின் கீழே ஓடிக்கொண்டிருந்த நதியில போய் விழுந்தது. நீரினால் வேகமாக அடித்துச் செல்லப்பட்ட அந்த இறகுகள் அந்தக் கரையில் குளித்துக்கொண்டிருந்த காட்டு இளவரசியின் கால்களைச் சுற்றிக் கொண்டது.

The Queen and The Boy Who Wanted to Fly

இளவரசி அதனைக் கையில் எடுத்தாள். இவ்வளவு இறகுகளுடன் யார் இதை இங்கே அனுப்பியது என்று தெரிந்துக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

தனது சேவகர்களோடு அந்த மலைமீது ஏறிவந்தாள் இளவரசி. அங்கே செடியன் ஒரு மரத்தைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தான்.

சேவகர்களோடு வந்த இளவரசி, “யார் நீ? ஏன் அழுகிறாய்?” என்று கேட்டாள்.

செடியன், தனது கதையைச் சொன்னான்.

இளவரசி சிரித்தாள்.

“நாமெல்லாம் மனிதர்கள். நம்மால் பறக்க முடியாது. ஆனால், சாதனை செய்ய முடியும். உன்னைப் பார்த்ததும் எனக்குப் பிடித்துவிட்டது. நகைச்சுவையாகவும் பேசுகிறாய். அதனால உன்னை அரண்மனையில் நகைச்சுவை மன்றத்தின் தலைவனாக நியமிக்க ராஜாகிட்ட சொல்றேன்” என்றாள்.

இதைக் கேட்டதும் செடியனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அன்று முதல் அவன் வாழ்வில் வசந்தம் வீச ஆரம்பித்தது. கிடைத்த சம்பளத்தில் தனக்கு உதவிய அத்தனை பறவைகளுக்கும் தானியங்களை வாங்கி வந்து கொடுத்தான்.

பறவைகளும் சந்தோஷத்தில் செடியனை வாழ்த்தின.

கதை ஆசிரியர்: கன்னிக்கோவில் இராஜா

நன்றி: தி இந்து (04/06/2014)

Story & Image Credit: The Hindu


27 May 2014

தோட்டக்காரனும் குரங்கும் | The Gardener and the Monkeys

தோட்டக்காரனும் குரங்கும்
(The Gardener and the Monkeys)

 அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தோட்டக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணிர்  ஊற்றி வந்தான். அவன் தண்ணிர் ஊற்றும்போதெல்லாம் அங்கு சில குரங்குகள் வந்து விளையாடும்.

The Gardener and the Monkeys 1

பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனும் குரங்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அப்படியே செய்து வந்தன.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

The Gardener and the Monkeys 2

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெரியதாக இருந்தால் நிறைய தண்ணீர் ஊத்துங்க. சிறிய வேரா இருந்தால் கொஞ்சமா தண்ணீர், ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

The Gardener and the Monkeys 3

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

The Gardener and the Monkeys 4

''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.

Read and download " The Gardener and the Monkeys " moral short story in tamil with pictures for kids online.

Download The Gardener and the Monkeys Story


தெனாலிராமன் கதைகள் | பஞ்சதந்திர கதைகள் | நீதிக்கதைகள் | அக்பர் பீர்பால் கதைகள் | முல்லா கதைகள் |

| Home | Disclaimer | Advertise with Us | Milestone | Sitemap | Contact Us | About US |

தமிழ் சிறுகதைகள் (Tamil Siru Kathaigal). Tamilsirukathaigal.com is an online educational website offers tamil short stories (தமிழ் சிறுகதைகள்), thenali raman stories (தெனாலிராமன் கதைகள்), Aesop moral stories (ஈசாப் நீதிக் கதைகள்), siruvar neethi kathaigal, mulla stories (முல்லா கதைகள்), arasar kathaigal (அரசர் கதைகள்), tamil moral stories, varalattruk kathaigal, akbar and birbal stories (அக்பர் பீர்பால் கதைகள்), panchatantra stories (பஞ்சதந்திரக் கதைகள்) and more moral short stories in traditional tamil language with pictures, pdf to download free for kids and childrens.
Disclaimer : All images are copyright to their respective owner. | © 2012 - 2014 Tamilirukathaigal . All Rights Reserved